
அந்த மண்டபத்தில் அவன் பதினோராவது ஆளாய் உள்ளே வந்தான்.
ஏற்கனவே இருந்தவர்களின் முனகலை அவன் லட்சியம் செய்யவில்லை. தன் தோற்றத்தின் மீதான நம்பிக்கையா அல்லது மற்றவர்களைப் போல் ஒரு பிச்சைக்காரன் இல்லை என்கிற கர்வமா, ஏதோ ஒன்று.
புகைப்பதும் தலையை எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் வைத்து படுப்பதும் அவன் மேல் ஒரு மிரட்சியை மற்றவர்களுக்கு உண்டு பண்ணியது.
யாராவது தர்மம் தர வந்தால் அவனிடம் எந்த விதச் சலனமும் இல்லை. மற்றவர்களிடம் ஏற்படும் பரபரப்பை உள்ளூர ரசித்தபடி படுத்திருப்பான்.
‘பசிக்காதா’ என்று பூங்கொடி அவனை வினோதமாய் பார்த்தாள். கைக்குழந்தை அவளை உதைத்தது.
இன்று காரில் வந்து இறங்கியவர்கள் வேட்டி புடவை உணவுப் பொட்டலம் கொடுத்தபோது கூட அவனிடம் அசைவில்லை.
அவற்றை வாங்க முண்டியடித்து ஓடும் போது குழந்தை ஒரு இடைஞ்சல் போல பூங்கொடிக்குத் தோன்றியது.
‘வரிசையா வாங்க’ யாரோ அதட்டியபோது பூங்கொடி குழந்தையை அவள் இடத்திலேயே விட்டு விட்டு வரிசைக்கு ஓடினாள்.
திரும்பி வந்த போது..
குழந்தை சமர்த்தாய் அவன் மடியில் படுத்து விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள்.
அலட்டிக் கொள்ளாமல் கீழே விட்டு விட்டு தன் இடத்திற்குப் போனான் அந்த புது சாமியார் !
