நாகேந்திர பாரதி

எம் எஸ் பெருமாள் அவர்களின் ‘ தாலி தானம் ‘ சிறுகதை

தனது தாயார் பெயரில் அறக்கட்டளை நிறுவி அதன் மூலம் ஆண்டு தோறும் இலக்கியப் போட்டி வைத்து சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசு வழங்கி வரும் அண்ணன் ராய செல்லப்பா அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட். முதல் மரியாதை. வணக்கம்.

அவ்வாறு பரிசு பெற்றுள்ள இரண்டு சிறுகதைகளை மதிப்புரை வழங்கச் சொல்லி வாய்ப்பளித்த அழகியசிங்கர் அவர்கட்கு நன்றி

எண்பது வயது எம் எஸ் பெருமாள் அவர்கள், ஐம்பது வயது அருள் அவர்கள் .இருவரின் கதைகள்.

பெருமாள் அவர்களின் கதையில் பண்பாட்டைக் காக்கும் மனிதர்கள். அருள் அவர்களின் கதையில் பண்பாட்டைச் சிதைக்கும் மனிதர்கள். பளிச்சென்று தெரிந்த இந்த முரண்பாட்டில் மனிதர்களில் எத்தனை நிறங்கள் என்று காண்பிக்கும் இந்த எழுத்தாளர்களின் சமூக சிந்தனை வெளிப்படுவதை ரசித்து வணங்கவும் வாழ்த்தவும் தோன்றுகிறது. இப்போது ஒவ்வொரு கதையாக எடுத்துக்கொள்ளலாம் .

முதலில் நாம் அனைவரும் அறிந்த பொதிகை தொலைக்காட்சி முன்னாள் இயக்குனர் , பன்முகப் படைப்பாளர் எம் எஸ் பெருமாள் அவர்களின் ‘ தாலி தானம் ‘ சிறுகதை ‘.

‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ என்ற திரைப்ப படத் தலைப்பு உடனே ஞாபகம் வந்தது. இந்தக் கதையில் ஒரு பாட்டியின் தாலி , அவளின் பேத்திக்குத் தாலியாக அமைகிறது. அந்த முடிவை நோக்கி நகரும் கதையில் நம் கண்முன் மூன்று தலைமுறை மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் பாசமும் தெரிகிறது. வேஷமும் தெரிகிறது.

முதலில் கதையின் மூச்சைச் சொல்லிவிட்டு பிறகு நான் ரசித்த எழுத்தின் வீச்சை விவரிக்கிறேன். மூன்று மகள்களும் இரண்டு மகன்களுமாக வாழும் சுப்பையா பார்வதி தம்பதிகளின் ‘காந்திமதி பவனம்’ வீட்டில் ஆரம்பத்தில் பேரன் பேத்திகளின் கலகலப்பு. அந்தப் பேரன் பேத்திகள் பெரியவர்கள் ஆனபின் வருவது சலசலப்பு .

உறவு முறைக்குள் மணமுடிக்க வேண்டி முட்டி போதும் சகோதர சகோதரிகளுக்கு இடமளிக்காது, பேத்தி விருப்பப் படி வேற்று மதத் துணைவனோடு அவளைச் சேர்த்து வைக்கிறார் தாத்தா. அந்த மண நாள் அன்று உதவி செய்வது போல் நடித்து , திருமணத்தை உருக்குலைக்கப் பார்க்கும் முறைப் பையன் பேரனின் சதிச்செயல்களை முறியடித்து , அதற்கு தாலி தானம் செய்து உதவிய மனைவியோடு சேர்ந்து காந்திமதி அம்மனுக்கு நன்றி சொல்ல முடிகிறது கதை.

அது கதையின் மூச்சு. இனி எழுத்தின் வீச்சு .

கதாபாத்திரங்களின் குணநலன்களை அவர்களின் பேச்சுக்கள் மூலம் வெளிப்படுத்தும் ஆசிரியரின் பாணி மனம் கவர்ந்தது.

அந்தக் குடும்பத்தைக் கட்டிக்காக்கும் ஆணி வேர் தாத்தாவின் குணநலன்கள் வெளிப்படும் விதம் இப்படி .

அண்ணன் பெண்ணை தங்கள் மகன்களுக்கு மணமுடிக்க, அவரின் மகள்கள், அந்த ரெண்டு சகோதரிகளும் மோதிக்கொள்ளும் போது
“ஏட்டீ..ஒங்களுக்குள்ளேயே பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயமா இது… வாழப்போறவதானே அதைத் தீர்மானிக்கணும்’ என்று அதட்டி அடக்குவதில் ஆகட்டும்

சாதி மதப் பற்று கொண்டு, கோபித்து மண வீட்டில் இருந்து கிளம்பப் பார்க்கும் உறவினர் ஒருவரிடம் ‘பேத்தி ஆசைப்பட்ட மாதிரி அவ சிநேகிதன் ஜான் மனோகரனயே நிச்சயம் பண்ணீட்டோம்… அந்த மாப்பிள்ளை ஆசைப்பட்ட மாதிரி நம்ம பக்கத்து வழமைப்படி தமிழ்முறைத் திருமணம் நடத்துதோம்.. நீங்க இருந்து புள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணீட்டு முதல்பந்தியிலெ உக்காந்து சாப்பிட்டுட்டுப் போனாத்தானே எங்களுக்கும் கௌரவமா இருக்கும்“ என்று அழுத்தமாகவும் உரிமையுடனும் பேசி அந்த உறவினர் நகரமுடியாமல் நங்கூரம் போடுவதில் ஆகட்டும்

அவளை மணமுடிக்க முடியாத ஆத்திரத்தில் மண மண்டபம் வந்திருக்கும் தன் பேரன் ஒருவனின் குணம் அறிந்து ‘நெல்லையப்பன் வந்த நோக்கம் சரியில்லையோ‘னு தோணுது… பெண்ணுவீட்டு ஆளா ஓடியாடி உபசாரம் பண்ணுதாப்பிலெ பாவலா காட்டுதான்… அமுதாவெ கெட்டிக் கொடுக்கலேங்கிற ஆத்திரத்திலெ கலியாணத்தெ நிறுத்த என்னமே சதி பண்ணுதானோன்னு சம்சயமா இருக்கு’ என்று சொந்தம் ஒருவரை அவனை கண்காணிக்க அமர்த்துவதில் ஆகட்டும்

அனைவரிடம் ஆசி வாங்க அனுப்பப்பட்ட தாம்பாளத்தில் உள்ள தாலியைத் திருடிவிட்ட பேரனின் சதியை முறியடிக்க, தன் மனைவிக்கு , பூஜை அறையில் மஞ்சள் தாலி கட்டி , அவளின் தங்கத் தாலியை வாங்கி தாம்பாளத்தில் வைத்து தாலி கட்டும் வைபவத்தை நிறைவேற்றிக் காட்டுவதில் ஆகட்டும்,

அந்தத் திருட்டுப் பேரனை தனியே அழைத்துப் போய்
அவன் கையை இறுக்கிப் பிடித்து முறுக்கி “வெள்ளாளன் வீட்டுக் கல்யாணத்திலெ எனக்காக மனுஷக்கறி பிரியாணி பண்ணச் சொல்லீருக்கேன். இப்பந்தானே எளங்கறி சிக்கீருக்கு“ என்று சீறியபடியே அவன் கன்னத்தில் ஓங்கி அறைவதில் ஆகட்டும்

கடைசியாக மனைவியிடம் ‘ பின்னாடி பேத்திக்கு தாலிபிரிச்சுக் கோக்கையிலெ இந்தப் புதுத் திருமாங்கல்யத்தை சங்கிலியிலெ கொருத்துக்குடுத்து மாப்பிள்ளை கையாலெ போட்டுவிட்றச் சொல்லு.. நடந்த கூத்து நம்ம மூணுபேரோட போகட்டும்…என்ன இருந்தாலும் நெல்லையப்பன் நம்ம ரத்தம்லா… ஊர்க்காரவுக தூத்த நாமளே எடங்கொடுக்காண்டாம்!“ என்று அந்தத் துஷ்டப் பேரனையும் காப்பாற்றுவதில் ஆகட்டும் ,
அந்தக் குடும்பத்தின் அச்சாணி வேராக நிற்கும் அந்தத் தாத்தா இந்தக் கதையின் நாயகன் .

அவர் குணச்சித்திரத்தை உருவாக்கி மேற்கூறிய அந்த வசனங்களுக்குள் அவரைப் புகுத்தி நம் கண்முன் அந்தத் தாத்தாவைக் கொண்டு வருகிறார்.
ஆசிரியர் எத்தனையோ திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் அல்லவா. அந்த வாசம் இந்தச் சிறுகதையிலும் வீசுகிறது .

அடுத்து மனதில் பதிவது அவர் மனைவி , பாட்டி பார்வதி .

‘என்னமோ எங் கழுத்துக்கு கண்டம்’னு காந்திமதி கோடிகாட்டி நெல்லையப்பன் மூலமா கழத்த வச்சிட்டால்லா… இதை அவ உண்டியல்லெயே போட்ருவோம்… நான் கண்ணெமூடுத காலம்வரைக்கும் மஞ்சக்கயிறே நெலைக்கட்டும்’னு குங்குமம் வச்சுவிடுங்க ஐயா“ என்று நெகிழ்ச்சியுடன் கூறி கணவரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள், பழுத்த சுமங்கலி பார்வதி ஆச்சி! ‘ என்று முடிக்கும் போது நம் பழைய தலைமுறைப்பாட்டி , நம் கண் முன்னே தோன்றுகிறார்.

இது தவிர, மகன்கள், மகள்கள் இவர்களின் உரையாடல்கள் , உரசல்கள் மூலம் அந்தக் கதாபாத்திரங்கள் இந்தக் காலத்திற்கு ஏற்றபடி வெளிப்படுத்தும் எண்ணங்களும் வார்த்தைகளும் அவர்களையும் நம் கண் முன் கொண்டு வருகின்றன. இன்றைய காலத்தில் நடக்கின்ற பல நிகழ்வுகளையும், பேச்சுக்களையும் கதைக்குள் இணைத்து , அந்தக் குடுமபத்தோடு நம்மையும் உலாவி விட்டு, இறுதியில் கல்யாணம் நல்ல படியாக முடிந்த திருப்தியை நம் மனதில் விதைக்கும் ஐயா எம் எஸ் பெருமாள் அவர்கள் திரைக்கதை எழுதி இயக்கிய ஓர் திரைப்படத்தை நாம் பார்த்த திருப்தியை உண்டாக்குகிறார். அவருக்கு நன்றியும் வணக்கமும்.

————————————————

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன