
நெற்றி நிறைய விபூதிப் பட்டையும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும் அணிந்து, சிவந்த தன் கண்களை உருட்டிக் கொண்டே வந்தவரைப் பார்த்து அந்த ஊரே அஞ்சியது.
‘யாருடி இவரு?பாக்கவே பயங்கரமா தலைய சாய்ச்சுகிட்டு நடக்கறாரு.’?என்று அவரைப் போலவே நடந்து கேலி செய்த கண்ணம்மா அழுது கொண்டிருந்த தன் பேரனிடம்,
“அழுவாத கண்ணு. இப்படி அளுதுகிட்டே இருந்தா இந்த பூச்சாண்டி கிட்ட புடுச்சு கொடுத்துடுவேன்.”
அவர் பின்னால் ஓடி வந்த குமார்,
“இவரு யாருன்னு உங்களுக்குத்
தெரியாது. அதான் இப்படி அவரை உருவக் கேலி பண்றீங்க. ஒரு வருஷம் முன்பு வரை ஒரு புகழ் பெற்ற கலைஞர். இவர் வாசிக்காத வாத்தியங்கள் இல்லை. ஒரு குழந்தையைக் கார் விபத்துல இருந்து காப்பாற்றின இவருக்கு அதே காரில பலமா அடிபட்டு பத்து மாசம் கோமால இருந்துட்டு இப்போ இந்த நிலைமையில வந்திருக்காரு.”
“இவர் பூச்சாண்டி இல்லை.
சிவபக்தர். என்னோட அப்பா. என்னோட பழைய அப்பாவைத் தேடிகிட்டு இருக்கேன்”
என்று குரல் நடுங்கி அழ ஆரம்பித்தான்.
“ஒரு தெய்வம் தந்த பூவே “என்ற பாடலைத் தன் கையில் இருந்தக் கொட்டாங்கச்சி வயலினில் வாசிக்க ஆரம்பித்தார் அந்த மாபெரும் கலைஞர்.
எழுத்தாக்கம். முத்துகிருஷ்ணன். சென்னை
123 வார்த்தைகள்.
