
சத்திரத்தின் திண்ணையின் ஒரு மூலையில் வந்து அமர்ந்தார் அந்தப் புதிய சாமியார்.
அவர் ஒரு சுருட்டை எடுத்துப் பற்ற வைக்க, அருகிலிருந்தவர் முகம் சுளித்தார்.
“ஏஞ்சாமி! ருத்ராட்சக் கொட்டையும் விபூதிப்பட்டையுமா சிவப்பழமா இருந்துகிட்டு, அந்தச் சிவத்தையே மறக்கடிக்கிற, அறிவை மழுங்கடிக்கிற இந்தக் கஞ்சாப்புகை தேவைதானா? “
உடனே தன் கையின் சுட்டுவிரலை மேலே உயர்த்திக் காட்டி “அண்டத்தில் இருப்பவன்தான் இந்தப் பிண்டத்திலும் இருக்கிறான். ஆடுபவனும் ஆட்டுவிப்பவனும் அவனே! அவனன்றி ஓரணுவும் அசையாது. இந்த உடம்பு செய்கிறதென்றால் அவன்தானே உள்ளிருந்து இதை அனுபோகிக்கிறான்? யாமொன்றும் அறியோம் பராபரமே!” என்றார்.
“செய்யுற அட்டூழியத்தை எல்லாம் நீங்க செய்துட்டு சாமி மேல பழி போடாதீங்க. உனக்குள்ளே இருக்கிற அந்த ஆண்டவனுக்கே பொறுக்காமல்தான் என் மூலமா உன்னிடம் வந்து சொல்றான். எந்த விதத்திலும் போதைப் பொருளை நியாயப் படுத்தாதே”
அப்போது மற்றொரு சாது அவரருகே நெருங்கி வந்து கட்டுப் பணம் கொடுத்து தாழ்ந்த குரலில் எதோ கேட்க, இவர் ஒரு பொட்டலத்தைக் கொடுத்தார்.
“ஏண்டா கஞ்சா கபாலி! உன் கெட்டப்ப மாத்திக்கிட்டு இங்கே பரதேசிகளோட பரதேசியா வந்து ஒளிஞ்சிகிட்டா விட்டுடுவோமா? நடடா ஸ்டேஷனுக்கு!” என்று இழுத்துக்கொண்டு சென்றார் மாறுவேடத்திலிருந்த போதை ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர்.
(125 வார்த்தைகள்)
காஞ்சிபுரம்
