
அவனைப் பார்த்ததும் ரேவதிக்குப் பரபரப்பு. நான்கு வருடங்களாக இவனுக்காகக் காத்திருக்கிறாள். அவன். மகேஷ்வரன். அத்தை மகன். பொறுக்கி என்று ஊரே சபித்த வேளையிலும் இவளால் அவனைத் தன் மனத்திலிருந்து தூக்கி எறிய முடியவில்லை. அந்த நாள் அவள் நினைவுகளில் இன்னும் சிப்பிக்குள் நுழைந்த முத்தாய் பொதிந்து கிடக்கிறது.
அவள் கண்களை ஆழப் பார்த்து “நீ என்னை நம்பற தானே?” அவன் கேட்டான். கைகள் அவள் தோளைப் பற்றியிருந்தன. அந்தக் கண்களில் எத்தனை தீட்சண்யம்! அதைப் பார்க்க சக்தியின்றி கண்களை மூடிக் கொண்டாள். அவன் இதழ்களின் ஈரத்தை உணர்ந்தவள் கண் செருகிக் கிடந்தாள். சட்டென விலகியவன் அன்றே காணாமல் போனான். எத்தனை விளம்பரங்கள் கொடுத்தும் பலனில்லை. இன்று தான் வந்திருக்கிறான்.
கால்கள் பரபரக்க ஏதேதோ கனவுகளுடன் அத்தை வீட்டு மாடிப்படி ஏறியவள் சிலைபோல் உறைந்து நின்றாள். மகேஷ்வரன் கண்களை மூடி அந்தரத்தில் சப்பணமிட்டு அமர்ந்திருந்தான். இவள் அலற வாயெடுக்கும்போது திரும்பினான். கழுத்து மட்டும் தனியாகத் திரும்பியது. ரேவதி மயங்கிச் சரிந்தாள்.
மகேஷ்வரன் “அம்மா, நான் வந்த காரியம் முடிஞ்சாச்சு. ரேவதி இனிமேல் எனக்காகக் காத்திருக்க மாட்டாள். மாமியை அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லுங்கோ!”
‘இவன் என் மகனா, மகானா?’ புரியாமல் தாய் விழித்தாள்.
மொத்த வார்த்தைகள் 127
