
அகோரி வந்திருக்காராம் நம்ம ஊருக்கு. எல்லோரும் அவரை பார்த்திருங்க. அவர் முன்னால நின்னு அவரை கும்பிட்டுட்டு மனசுல உங்க விருப்பத்தை நினைச்சுக்கோங்க. கையை உயர்த்தி காட்டுனாருன்னா, உங்க விருப்பம் நிறைவேறிடும்னு நினைச்சுக்கோங்க. மறக்காம சுருட்டு ஒண்ணே ஒன்னு அவர்கிட்டே குடுத்திடுங்க.
கத்திக்கொண்டே முண்டாசுப்பட்டி கிராமத்துல உள்ள நாலு தெருக்களையும் சுத்திச் சுத்தி வந்தான் சுள்ளான்.
ஐந்து நிமிடங்கள் தான்.
ஆலமரத்துக்கு கீழே ஒருக்காட்சி படுத்துகிட்டு இருந்த அகோரி முன்னால கூட்டம் கூட ஆரம்பிச்சிச்சு.
முப்பது வயது ஹேமா வேண்டினாள். “சாமி எனக்கு கல்யாணம்?” அகோரி கையை உயர்த்தினார். தட்டுல சுருட்டு ஒன்னு விழுந்தது.
இருபத்திநாலு வயது சுமதி உப்புன வயத்தோடு வந்தாள். “எனக்கு ஆம்புள புள்ள தான் வேணும்.” கையை உயர்த்தினார் அகோரி. இன்னொரு சுருட்டு விழுந்தது.
நாற்பது வயது முனியம்மா வந்தாள்.“என்னோட மவனுக்கு வேலை கிடைக்கணும்.” அகோரி கை உயர்ந்தது; சுருட்டும் தட்டுல விழுந்தது.
கண்ணாயிரம் வந்தாரு. “எந்த தடங்கலும் இல்லாமல் தினமும் சாராயம் கிடைச்சிகிட்டே இருக்கணும்.”
அகோரி கையில இருந்த ஒரு கல் பறந்து சென்று கண்ணாயிரம் தலையை பதம் பார்த்தது.
சுருட்டு விழவேயில்லை.
கௌரி சங்கர்
(125 words)
