
கங்கைக்கரையில் சந்தானமும், முனுசாமியும், அலைந்து திரிந்து விட்டு அந்த மண்டபத்தில் வந்து அமர்ந்தனர்.
“டேய் முனு, எப்படியாவது எங்க அப்பனைக் கண்டுபிடிக்கணும்டா.”
“நம்ம ஊர்ல தான, இத்தினி நாளு இருந்தாரு. அங்கல்லாம் விட்டுட்டு இங்க தேடி வந்திருக்கீங்களே! ” சலித்துக் கொண்டான் முனுசாமி.
“வந்தவன் சும்மா வந்திருந்தா, நான் ஏன் தேடப்போறேன்?”
“என்ன பண்ணாரு? ”
“நான் பாவம் பண்ணி பணம் சம்பாதிக்கறேனாம். ‘இனிமே நான் இங்க தங்க மாட்டேன். இத்தனை நாள் இந்தச் சோத்தைத் தின்னதுக்கே நான் காசிக்குப் போகணும்’னு சொல்லிட்டுப் பரம்பரை பஞ்சலோகம் சிலையைப் பூஜை பண்ணப் போறேன்னு வாங்கிட்டு வந்துட்டாரு.”
“அட, இதுக்கா இம்புட்டு தூரம், தொரத்திக்கினு வந்தோம். வேற வாங்கிக்கலாம், விடுங்க”
“அடச்சீ, ரெய்டுக்கு பயந்து, அதுக்குள்ளதான் லாக்கர் சாவி வெச்சிருக்கேன்டா”
மண்டபத்தின் இருட்டுப்பக்கமாய் படுத்திருந்த சாமியார் எழுந்தார். கையிலிருந்த பீடியைக் கீழே போட்டார். அவரது ஒரு கை மேலே உயர்ந்தது. அவனுக்கு எல்லாம் தெரியும்.
