எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள்

14/8/26
இணையக்
கவி அரங்கில்
எஸ்ஸார்சி வாசித்த கவிதைகள்

1 நடப்புகள்

பாம்புக் கடித்து செத்துப்போன தாத்தா
மீதம் வைத்துச் சென்றது கிராமத்தில்
ஒரு ஓட்டு வீடு
அதனைப்பாதி கபளீகரம்
செய்தது நிலம் அளக்கும் சதித் துறை
நடந்து நடந்து கால்கள் தேயும் நடப்புகள் நரவலாய்
ஆயிரம் செலவு ஆனகதையொன்
றில்லை
கண்கள் துடைத்து நிற்கும் சதி சிக்கிய
மக்கள் வரிசை வரிசையாய்.
பெரிய பெரிய சைசில்
இந்தியதேசபிதா
அம்பேத்கர் அண்ணா வோடு காமராசர் படம் மாட்டித்
தினம் துடைக்கிறார்கள்
மேல் தூசு அதிகம் என்பதால்
வெள்ளி மாலைப் பூசையில்
கண்டிப்பாய் மணி
அடிக்கிறார்கள்
பஞ்சாமிர்தம் நக்கியேமுடிக்கிறார்கள் முடிவில்.

2. அப்பா

எல்லோரும் வந்து
பார்த்துப் போனார்கள்
யாருக்கும் சொல்லாதே உனக்குச் சிரமம். கஷ்டம் அறிந்த
சிவராம சாத்திரியோடு
காரியம் பார்
ரொக்கம் அதிகமாகாது சொர்க்கம் சுலுவே
ரெண்டு லிட்டர்
சீமெண்ணெய்ச்சீனி
சிறிதளவு மண்குடங்கள் இரண்டோடு
நான் வளர்த்த மூங்கிலுண்டு
தென்னை யோடு விறகு உண்டு
பொட்டிட்டுப்
போவதற்கு இல்லை
உன் அம்மாவுக்கு
தலையெழுத்துப்பிரச்சனை.
சுற்றினேன் சுழன்றேன் திரும்பிப்பார்ப்பதற்
குள்
சேரும் ஊர் எப்படி வந்ததோ
கண் திறந்து
கண் திறந்து மூடும் அப்பா. கிட்னி தானம்கண்தானம் கொடுங்கள் நல்லது
நண்பர்கள் பக்கத்தில்.
வைத்துக்காக்காத எனக்கு
வாயுண்டோ
திறக்க த்தான் தலை கவிழ்ந்து
தரை பார்த்தேன் நான்.


3.அம்மாவும் அப்பாவும்

அம்மா மறைந்துபோய்
ஆண்டொன்றாயிற்று
சாணிக்கலர் புடவையின் கிழிசல்கள் தெருவோரம்
கருப்பு அம்மாவை நினைவூட்டியபடி
அம்மாவின் கண்ணாடிச்சீட்டினை
தூக்கி எறிய மனம் கனக்கிறது.
மடித்துவைக்கிறேன்
இருக்கட்டும்.அப்பா எனக்கெழுதிய
பெனசல் கடிதத்தை
டைரியில் ஒட்டிவைத்து
திறந்து திறந்து பார்க்கிறேன் பச்சை விபூதி டப்பா அப்பா
விட்டுச் சென்றது மாடத்தில்.
ராமா ராமா என்று சொல்லித்தான்
பூசைவிட்டுக்
கொள்வார்
சிண்டுவைத்த அப்பா.
அப்பா அம்மாவோடு
தருமங்குடி இடுகாட்டில் இரவு
முழுவதும் வெந்து கருப்பு ஆகிய காசுகள்
பத்திரமாக இருந்தென்ன
லொடுக் என்று மனம் இறங்கிககொள்கிறது
தாயும் தந்தையும்
நானாகியிருப்பதை
சிற்றறிவு நினைவூட்டுகிறது
ஏற்றுக்கொண்டால் தானே மனம்.

4. கடமை

என் படிப்புக்கு
தன் வெற்றுக் கால் தேய்த்த அப்பா
யூரின் டியூபுடன் பை தொங்க ஆயிரம் மைலுக்கு அப்பால்
இன்றோ இப்போதோ
என்றபடி.
என்பசிக்குத் தன் பசியைத் தவிர்த்த அம்மா காய்ந்த நார்த்தம் ஊறுகாயாய்
கட்டாந்தரையிலங்கு
அப்பாவுடன்.
வழிகாட்டி வயிறுநிரப்ப
என் வாய் வளர்த்த தமையன் ரெண்டு கிழத்திடையே
நான் சன்னலில்லா குளிர் அறையில் சுழல் நாற்காலியில
சபாரி அணிந்து தான்
போதாதா
என் தந்தைக்கும் தாய்க்கும்
என் பேத்தல்
சிலதுகளை
காணிக்கை செய்து
நிமிர்த்தி இருக்கிறேன் கடமை.

5. கணக்கு

தாத்தா திருமாலுக்கு
விட்ட
செந்நெல் வயல்கள்
மேல வெளி புஞ்சைக்காய்ப் பரிவர்த்தனை
சாம்பாரில் மிதக்கும்
வற்றல் மிளகாய்
பொறுக்கிக் காயவைத்தால்
ஆட்களுக்காகும்
அனுசரணையாய்.
தோட்டத்து வெண்டை
பின்னும் முற்றட்டும்
கட்டாயம் தானத்தில் அய்யருக்கு.
நேற்றைய பொரியல்
நெடி வந்ததுவா
மாட்டுக்காரனுக்குக்
கட்டளை கறாராய்
கொடுப்பதற்கும்
கொள்வதற்கும்
குவிந்தும் குழிந்தும்
அடியுடைப் படிகள்
புழக்கத்தில் இருப்புக்குடமிரண்டு
புறம் ஒன்றாய் சைக்கிளில்
சொந்தவண்டி நிழலிருக்க
வாடகைக்கு எடுத்து
தண்ணீர் தருவிப்பு
அலுவலகச் சலுகை
முடியுமுன்னே விவரமாய் புரட்டாசி
மகிமைக்கு திருப்பதி
திருப்பயணம்
கணக்கு என்றால் கணக்கு தான்
போடா போ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன