நாகேந்திர பாரதி/சுழியம் என்ற கதையைப் பற்றி

நண்பர் சேது அவர்களும் நானும் வெங்கடேசன் அவர்கள் எழுதிய ‘வேள்பாரி ‘ நாவல் ரசிகர்கள் ஆரம்பித்த ‘ பாரியின் பாணர்கள்’ குழு உறுப்பினர்கள். நண்பர்கள். அவரது கதைக்குப் பரிசு கொடுத்ததற்கு செல்லப்பா சார் அவர்கட்கு நன்றியும் வணக்கமும்.

சுழியம் என்றால் ஒன்றுமில்லாத தன்மையைக் குறிக்கும் பூஜ்யம். கதையின் நாயகி கணித ஆசிரியையின் வாழ்வும் அதுபோல் பூஜ்யமாக இருக்கும் நிலைமையை உருக்கமாகச் சொல்லி அதற்கு காரணமான இந்த சாதி வெறி பிடித்த சமூகத்தைச் சாடுகிறார் தனது கதையில் ஆசிரியர்.
இள வயதில் அவள் காதலித்த வாலிபன் வேறு சாதி என்பதால், இவள் கண் முன்னே அவனைக் கொடூரமாகக் கொன்ற தந்தை , சகோதரர்களைத் தொடர்ந்து, இப்போது நாற்பது வயதிற்கு மேல் அவள் மேல் காதல் கொள்ளும் இன்னொரு ஆசிரியரிடம் இருந்து பிரிப்பதற்காக , மற்றுமொரு தற்கொலை நாடகத்தை அவர்கள் மண வாழ்வு ஆரம்பிக்க இருக்கும் நாள் அன்று , அதே பள்ளியில் அரங்கேற்றும் சாதிவெறி பிடித்த சமுதாயத்தை மறுபடியும் காட்டி , வருடங்கள் ஓடினாலும். அந்த வன்மங்கள் மாறவில்லை என்பதை உணர்ச்சிகரமாகக் காண்பித்து, அந்தப் பூஜ்யத்தோடு ஒன்று சேருமா, அந்த பூஜ்யம் மதிப்பு பெறுமா ‘ என்ற கேள்வியை ஓரத்தில் நிற்கும் அந்த நாயகனிடமும் நம்மிடமும் விட்டு விடுகிறார் ஆசிரியர்.

நண்பர் ஒரு கவிஞரும் கூட என்பதால் , கதை முழுக்க கவிதை நயம் நிரம்பிய வரிகள். அவற்றில் ஒரு சில இங்கே .

மழை பெய்யும் அந்த இரவின் வருணனைகள் பல அவள் வாழ்வோடு தொடர்புபடுத்தும் விதத்தில் இப்படி .

தூரத்தில் கேட்கும் இடியோசை, நிலத்தின் ஆழத்திலிருந்து எழும் ஒரு முதிர்ந்த மனிதனின் முனகலைப் போல மெலிதாகக் கேட்டது. புதிய வாழ்க்கை தொடங்கத் துடிக்கும் நாயகியின் மனதின் முனகலோடு தொடர்பு படுத்திப் பார்க்க முடிந்தது .

வரப்போகும் மழையின் வாசனை காற்றில் ஈரமாகவும், கனமாகவும் படிந்திருந்தது. அது ஒரு சாதாரண மழையல்ல, நிலத்தின் தழும்புகளைக் கழுவத் துடிக்கும் ஒரு பெருமழை .
அவள் மனதின் சோகத் தழும்புகளைத் துடைத்து எறியுமா இனி வரும் நிகழ்வுகள் என்ற ஆர்வம் நம் மனதில் எழுகிறது .

‘காலையில் எழுந்தபோது வானம் ஒரு அழுக்குத் துணியைப் போலத் தெளிவில்லாமல் இருந்தது.’
ஏதோ சரியில்லை என்ற எண்ணம் நம் மனதில் எழும்புகிறது .

இப்படி மழையை மட்டுமா அவள் வாழ்க்கை யோடு இணைக்கிறார். அவள் கணித ஆசிரியை என்பதால், கணிதமும் , இந்தக் கதையில் ஒரு உருவக விளையாட்டு ஆடுகிறது . அந்த ஆட்டம் இப்படி ஆசிரியர் எழுத்தில் .
பாடம் முடிந்து அவள் கரும்பலகையில் கணித எண்களை அழித்துக் கொண்டு இருக்கிறாள், காட்சிகள் விரிகின்றன நமக்கு அவர் வார்த்தைகளால் .

‘கரும்பலகையில் எண்களை அழிப்பது எளிது. ஆனால், மனதின் அடுக்கில் படிந்துவிட்ட கணிதங்கள் அவ்வளவு சீக்கிரம் அழிவதில்லை. அவை தீராத வலியைப்போல எப்போதும் அடிமனதில் கணக்கிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன’.

‘கரும்பலகையில் எஞ்சியிருந்த அடுத்த எண்ணை அழிக்க இளவரசி கையை உயர்த்தியபோது, அவளது விரல்கள் தன்னிச்சையாக நடுங்கின. விழிகள் சிவந்து கண்ணீர் திரையிட, அவளது உதடுகள் காற்றோடு காற்றாக ஒரு பெயரை உச்சரித்தன.
“முனியா…”

‘அடித்து, குத்திக் கிழித்து, அவன் உயிர் பிரியும் தருணத்தில் தீயிட்டுக் கொளுத்தியபோது, அவனது மரண ஓலம் அந்த ஊரின் காற்றில் இன்றும் உறைந்து கிடப்பதாகவே அவள் உணர்கிறாள்.’

அவளது வாழ்வின் கணக்குகள் அனைத்தும் நிலைகுலைந்து போயின.
‘எண்களின் வளைவுகளுக்கு ஏற்பத் தன் உடலை வளைத்து, கைகளை அசைத்து அவற்றை அழித்தாள். அது எண்களை அழிப்பது போலத் தெரியவில்லை; தன் வாழ்வின் கசப்பான பக்கங்களை ஒவ்வொன்றாகத் துடைத்தெறிவது போலிருந்தது’

‘கடந்து வந்த கசப்பையும், கொஞ்சமே கொஞ்சம் மிஞ்சியிருக்கும் இனிப்பையும் கொண்டுதான் அவள் சூத்திரங்களை அணுகுகிறாள்.’

‘கரும்பலகையில் எஞ்சியிருந்த அடுத்த எண்ணை அவளது கைகள் அழித்தபோது, உடல் லேசாக அதிர்ந்தது. கன்னங்களில் ஒரு மெல்லிய சிவப்பேறியது. பூபதி வாத்தியாரின் நினைவு அவளைத் தீண்டியது’

‘இருபத்தி மூன்று வயதில் கலைந்து போன கனவு, சாம்பலில் இருந்து எழும் பறவையைப் போல மீண்டும் ஏன் இப்போது உயிர்த்தெழுகிறது? விடை தெரியாத கணிதச் சிக்கலைப் போல .

மறுநாள் , அந்த வகுப்பறையின் மின்விசிறியில் பிணைக்கப்பட்ட கயிறுகளில் தொங்கிக்கொண்டு இருந்தது அதே ஊரைச் சேர்ந்த யாரோ ஒரு காதல் ஜோடி. அதே கௌரவத்தின் எச்சங்கள், இன்றும் அந்தச் சின்னஞ்சிறு உடல்களில் ரத்தமாக வழிந்து கொண்டிருந்தன. பூபதி அமைதியாய் ஓர் ஓரத்தில் நின்றிருந்தார்.

‘அந்தப் பள்ளிக்கூட கரும்பலகையில், நேற்றைய சில கணக்குகள் இன்னும் அழிக்கப்படாமலேயே மிச்சமிருந்தன’

இந்தக் கணக்குகளின் முடிவில் அவள் பூஜ்யமாக , சுழியமாக நின்றுகொண்டு இருக்கிறாள். ஓரத்தில் நிற்கும் பூபதி வருவாரா. பூஜ்ஜியத்துடன் சேர்ந்து ஒன்றாகி நிற்பாரா அவர்கள் ஒன்றாவார்களா, அதோ சாதிவெறி ரத்த எச்சிலுடன் காத்துக் கொண்டு நிற்கும் அந்தச் சமுதாய வெறிநாய்கள் அவர்களை வாழ விடுவார்களா. கேள்வியுடன் முடிகிறது கதை.

இப்படிக் கதை முழுக்கத் தெறித்துக் கிடக்கும் கணக்கு உருவகங்களைத் தொகுத்துப் படித்தாலே போதும் . முழுக்கதையும் ஒரு உருவக நாடகமாக நம் மனக்கண் முன் ஓடுவதை நாம் உணர முடியும்.நண்பர் சேதுவின் எழுத்துத் திறமையினை வியந்து வாழ்த்துகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன