
சங்கரன் மிகுந்த சிவ பக்தி உடையவன். அவனுடைய பெற்றோர்களும் அப்படியே. தினம் தினம் ஈசன் கோவிலுக்கு செல்லும் அவனுக்கு பன்னிரு திருமுறைகளும் மனப்பாடம். பொறியியல் பட்டதாரியான அவனுக்கு சமீபத்தில் வேலை கிடைத்தது. என்றாலும் வேலையில் மன அழுத்தம் கூடியது. என்ன செய்வது என்று யோசித்து அவன் கடவுளின் பெயரை பாடுவதில் கிடைக்கும் ஆனந்தம் வேலையில் இல்லை என்பதை உணர்ந்தான் .ஒரு நாள் வேலையை உதறித் தள்ளிவிட்டு பக்கத்தில் உள்ள ஆற்றுக்கு சென்று நன்கு நீராடி நெற்றியில் திருநூறு பூசி கைலாய நாதர் கோலத்தில் அவனுடைய பெற்றோர்கள் முன் வந்து நின்றான். பெற்றோர்களுக்கு அன்று அவனைப் பெண் பார்க்க வரும் பெண் வீட்டாருக்கு என்ன பதில் சொல்வது என்ற புது கவலை வந்துவிட்டது. ஆனால் வந்தவர்களோ சாமியிடம் தங்களது பெண்ணுக்கு எப்பொழுது திருமணம் ஆகும் என்று கேட்டு அதற்காக சம்பாவணையும் சங்கரனுக்கு கொடுத்துவிட்டு போனார்கள்.
