கணக்கு வாத்தியார்

 சுரேஷ் ராஜகோபால்

நான் சிறு வயசில் இரட்டை வாலு. படிப்பிலும் படு சுட்டி .


அரசு மேல் நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தேன். என் வகுப்பில் மொத்தம் 40 பேர் படித்தோம்.
அதில் மாணவர் மாணவியர் சரி பாதி.


எங்களுக்குக் கணக்கு பாடம் சொல்லித்தர வேதாந்தம் என்ற ஆசிரியர் வருவார். நல்ல வெள்ளை நிறம். ஆனால் உடுப்பில் கவனம் செலுத்தமாட்டார். கசங்கிய சட்டை, பாண்ட் போட்டு வருவார்..


கணக்கு நல்ல சொல்லியும் தருவார். எல்லோருக்கும் புரியும் படி விளக்கம் கொடுப்பார். புரியாதவர்கள் ஆசிரியர் அறைக்கு வரச்சொல்லி, புரியாததைப் புரியவும் வைப்பார். நல்ல குணம் உண்டு.


அவர் பாடம் நடத்தும் போது வகுப்பு முழுவதும் அமைதியாக இருக்க வேண்டும். யாராவது குறும்பு செய்தால் ஓடி வந்து நறுக்கென்று கிள்ளி விடுவார். மாணவ மாணவியர் பேதமில்லை. வயது வந்து பெண்ணைக்கூட எப்படிக் கிள்ளலாம் என்று பலரும் அவருக்குப் பின்னால் பேசினாலும் எதிரே யாரும் குரல் கூட கொடுத்ததில்லை .


அவர் கிள்ளும் போது மாணவர்கள் நெளி நெளியென நெளிவார்கள். சிலர் துடித்தும் கத்துவார்கள். இதெல்லாம் தப்பு செய்பவர்களுக்கும் , குறும்பு செய்பவர்களுக்கும் மட்டுமே தண்டனை.

இது தவிர அவரிடம் ஒரு கெட்ட குணம் வேறொன்றுமிருக்கிறது. பாடம் நடத்தும் போது வாயிலிருந்து எதிரில் அமர்ந்திருக்கும் மாணவர் மேலே எச்சில் தெறிக்கும். உடனே “சாரி” என்று சொல்லி நகருவார்.

பலமாகக் கிள்ளுவதால் மாணவர் நடுவே அவருக்கு “நலங்கிள்ளி” என்ற பட்டப்பெயர் வந்தது. நாங்கள் இதனைப் பரி பாஷையில் பேசிக் கொள்வோம்.

மாணவியரும் அந்த ஆசிரியருக்கு “நெடுங்கிள்ளி” என்ற பட்டப்பெயர் வைத்துள்ளனர் என்பது பெயர் சில நாட்கள் கழித்துத்தான் தெரிந்து கொண்டோம்.
இதில் ஒரு மகிழ்ச்சி.


இனிமே நாம் பொருக்க வேண்டாம், அவர் கிள்ளுவதை எப்படியும் நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம்.
அதற்கான சந்தர்ப்பம் வரும் நாளுக்குக் காத்திருந்தேன்.


அது அன்று நடந்தது


அதற்குச் சரியான ஆள் நான் தான் என்று மொத்த வகுப்பே முடிவு செய்தது..


நான் சும்மா இருக்கவே மாட்டேன், ஒருநாள் அவர் வகுப்புக்குள் வரும் போதே வாய் மீது கை வைத்துக் கொண்டு “யார்மீது எச்சில் மழை பொழியப் போகிறதோ இன்று” என்றேன்.

நேரே என்னிடம் வந்தவர் நன்றாகக் கிள்ள ஆரம்பித்தார். “இதற்கப்புறம் சாரி சொல்லவீங்களா?” என்றேன்.


வலியைப் பொறுத்துக் கொண்டேன்..
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் கிள்ளுவது சுத்தமாக நின்று போச்சு, ஆனால் என்னைப் பற்றிக் கெட்ட எண்ணம் அவர் மனதில் விழுந்து விட்டது.
எவ்வளவு நல்லா படிக்கிற பையனாக நானிருத்தாலும், நல்ல பையன் நானில்லை என்று பள்ளி முழுவதும் சொல்லி வந்தார். மற்ற ஆசிரியர்கள் என்னைத் தனியாகக் கூப்பிட்டு இதைப் பற்றிக் கேட்பார்கள்.
ஒருநாள் நான் நேராக ஆசிரியர் அறைக்குச் சென்று அவரிடம் “ஏன் இப்படி என்னைப் பற்றி எல்லோரிடமும் சொல்கிறீர்கள்?” என்றேன்.


“ஆமாம், நீ நல்லா படித்தால் மட்டும் போதாது, ஒழுக்கம் வேண்டும், அது உன்னிடம் கொஞ்சம் கூட இல்லை” என்றார்.


அன்று வகுப்புக்கு வந்தவர் “இந்த ஒழுங்கீனமானவன் கூட யாரும் சேராதீங்க, உங்களையும் கெடுத்துடுவான், ஜாக்கரத்தை” என்று பிரகடனம் செய்தார்.


“உன்ன .எப்படி ஒடுக்கறேன் பார்” என்று மூச்சு வாங்கச் சொன்னார், கருவிக்கொண்டே பேசினார்.

#
அடுத்த நாள் காலை என் வீட்டுக்கு என் அப்பாவின் நண்பர் ஒரு சைக்கிளில் வந்து இறங்கி இன்னொருவருக்காக நின்றார்..


பின்னால் வந்தவர் வேறு யாருமில்லை, எங்கள் கணக்கு வாத்தியார்தான்.


ஐயோ எதற்கு வீட்டுக்கு வந்தார்? என்னைப் பற்றி ஏதேனும் அப்பாவிடம் கோள் சொல்ல வந்துவிட்டாரோ என்று மனது அலை பாய்ந்தது.


என் அப்பா பயங்கரமானவர், என்னோட குறும்பெல்லாம் அவரிடம் எடுபடாது. பெல்ட் எடுத்து விலாச்சிடுவார். இப்ப நிலைமையை எப்படி சமாளிக்கறது என்ற கவலை எனக்கு.
அப்பாவுக்கு வீட்டிலேயே ஒரு அலுவலக அறை இருக்கிறது. அதில் இரண்டு பேர் வேலை செய்றாங்க. நிறையப் பேர் வருவாங்க, போவாங்க..
அவர் “லேவாதேவி” பண்ணுவதாக அம்மா ஒரு தடவை சொன்னாங்க.
அப்பாவோட அலுவலக அறைக்கு ஓடிச் சென்று வாத்தியார் சொல்வதை நம்பவேண்டாம் அப்படின்னு சொல்ல உள்ளே போனேன்.
வார்த்தை தடுமாறியது, பேச்சு வரவில்லை “என்னடா வேணும் இப்ப, யாரோ வராங்க அப்பறம் நாம் பேசலாம்” என்று சொல்லி அனுப்பி விட்டார்.
நான் வெளியேறும் போதுதான், சரியாகக் கணக்கு வாத்தியார் உள்ளே வந்து கொண்டிருந்தார், என்னைச் சாந்தமாகவே பார்த்தார். அவர் முகத்திலே வன்மம், கொடூரம், கோபம் ஏதுமில்லை.
அந்த அலுவலக வாசலிலேயே மறைந்து நின்று கொண்டேன், உள்ளே பேசுவது கேட்கும் ஆனால் நானிருப்பது யாருக்கும் தெரியாது.
என்னைப் பற்றி என்ன சொல்லப் போறார் அப்படின்னு.
என் அப்பாவின் நண்பர் தான் பேச்சைத் துவக்கினார், “இவரு இங்க அரசுப் பள்ளியிலே வாத்தியார் , என்னோட தோஸ்து, பாவம் இவர் மனைவிக்குச் சயரோகம், நிலைமை ரொம்ப மோசம், நாளைக்கு எதோ சிகிச்சை பண்ணப் போறாங்களாம், அதோட அறிக்கை பார்த்த பின் தான் அவங்க நிலமை தெரியும், அவசரமா ரூபாய் இருபதாயிரம் தாங்க , நான் ஜாமீன் கையெழுத்து போடறேன்” என்றார்.
‘அவருக்கு ஒரு பணம், பிஎப் கடன் போட்டிருக்கார், அது வரவேண்டும் வந்தவுடன் திருப்பிக் கொடுத்திடுவார்.”
“ஓ.. அதுக்குத்தான் என் மகன் தன் வாத்தியார் வரத்தைச் சொல்ல வந்தானா? நீங்க ஜாமீன் தறதா இருந்தால் உடனே தரேன்.” என்கிறார்.
அலுவலக குமாஸ்தாவைக் கூப்பிட்டு இவர்களிடம் கையெழுத்து வாங்கிக்கோப்பா ” என்றார்
என்னைக் கூப்பிட்டு வரச்சொன்னார் நானும் எதுவும் தெரியாதது மாதிரி உள்ளே போனேன். “ஏண்டா உங்கள் வாத்தியாருக்குத் தான் சிபாரிசு செய்ய வந்தியா, இதோ பணம் அவருக்குப் பட்டு வாடா செய்யப் போறேன், சந்தோஷம் தானே” என்றார்
இதுதான் அவரின் ஏழ்மைக்குக் காரணமா? அவர் கோபத்துக்குக் காரணமா? நான் நினைத்துக்கொண்டேன்.
“எனக்கு ரொம்ப சந்தோஷம் அப்பா” என்று கை கூப்பியபடி சொன்னேன்.
வாத்தியார் கண் கலங்கியது.

One Comment on “கணக்கு வாத்தியார்”

Comments are closed.