
3500 மீட்டர் உயரத்தில் ஈஸ்வர் நடுங்கும் குளிரில் கேதாரீஸ்வரரை தரிசனம் செய்துவிட்டு, கோயிலிலிருந்து வெளியே வந்தான். குளிர்கால உடைகள் எதுவும், எலும்புவரை ஊடுருவும் குளிரைத் தடுக்க முடியவில்லை. பற்கள் தாமாகத் தந்தியடித்தன. கைகால்கள் அனிச்சையாக உதறின. பூட்ஸுக்குள் ஆயிரம் தேள்கள் கொட்டும் வலி. மெதுவாக நடந்து, கோயிலின் பின்புறமிருந்த பீமன் பாறையருகில் சென்றான்.
அங்கு ஒரு பெரிய மரத்தடியில், சின்ன கம்பளி மட்டும் போர்த்தி, வலது கையை வானை நோக்கி உயர்த்தி, விரலால் வானத்தைச் சுட்டி, நெற்றியில் பட்டையாக விபூதி,சந்தனம், குங்குமம் பூசி, கழுத்தில் ருத்திராட்ச மாலையுடன் ஒரு சாது அந்தரத்தில் அமர்ந்திருந்தார். – ஈஸ்வரைப் பார்த்தவரின் தலை, கழுத்தில் தானாகச் சுழன்று குறுக்காக நின்றது. தாடி, உயர்த்திய கையைத் தொட, அவர் புன்னகைத்த மாதிரி இருந்தது ஈஸ்வருக்கு!
விண்ணை மீண்டும் காண்பித்து, கையை இறக்கி, உதடுகள் மீது விரலை வைத்து, கண்கள் விரிய ஏதோ சமிக்ஞை செய்தார். ‘ஹர ஹர மஹாதேவ்’ எனக் கூவினார்.
ஈஸ்வருக்குச் சிலிர்த்தது. சீசன் முடியும் தருணம், முதன்முறையாகப் பனிப் பொழிவு! கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் ‘ஹர ஹர மஹதேவ்’ என கோஷமிட்டனர்.
ஈஸ்வருக்கு உடல் முழுதும் உஷ்ணம் பரவியது. அந்தப் பனிக் குளிரிலும் வியர்த்தது. பெரிய மேகம் போன்ற ஒன்று இவனைத் தழுவிச் சென்றது!
பனிமூட்டம் கடந்து சென்ற பிறகு, எதிரில் இருந்த அகோரியைக் காணவில்லை, போர்த்திய கம்பளி மட்டும் சுருண்டு கிடந்தது! வானை நோக்கிய விரல் மட்டும் காற்றில் ஒளிர்ந்து கொண்டிருந்தது!
