
பரதேசி போல் தோற்றமளித்த அவர் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். பரட்டைத் தலை; பரபரக்கும் கண்கள். கையில் இருந்த ஊது குழலால் ஊதி புற்றுகளுக்குள் வாசம் செய்யும் பாம்புகளைப் பிடித்துக் கொண்டிருந்தார்.
“அப்பனே! என்ன செய்கிறாய்? ” என்று குரல் வந்ததும் அந்த பரதேசி திரும்பி நோக்க குருநாதரான பாம்பாட்டி சித்தர் நின்றிருக்கக் கண்டார்.
“ஐயனே! தாங்கள் எனக்கு உபதேசம் செய்த மந்திரத்தின் பலனாக, ஏழு வருடங்களாக நாகமணியைத் தேடிக் கொண்டே இருக்கிறேன். அத்தகைய நாகம் என் கண்ணில் படவே இல்லை.! இனி என்ன செய்வது?”
சித்தர்,கனிவுடன், “குழந்தாய்! இருக்குமிடம் விட்டு இல்லாத இடம் தேடி அலைகிறாயே! தவம் செய்து அடைய வேண்டிய பொன்னீல மணியை வேட்டையாடி பெறலாகுமோ? உடம்பிலே இரண்டரைச் சுற்றாய் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சர்ப்பத்தை சுழுமுனை வழியே தூக்கி நிறுத்த,; நீலமணி எனும் சாம்பவியும் பொன் மணியென திகழும் சாம்பனும் ஆடும் பொன்னீலமணி நடனம் காண்பாய்! அதை எப்போதும் தரிக்க’ மணி சித்தன்’ என்ற புகழ் சித்தியாகட்டும்.” என்று சொல்லி பாம்பாட்டி சித்தர் மறைந்தார்.; மலராசனத்தில், அந்த தவத்தோன், தவத்தில் பொன்னீல மணி தரிசனம் காண தவத்தில் ஈடுபடலானார்.
