ஜி ஏ பிரபா-யசோதரைகள்


“அவர்தான் சித்தர்”-மீனா
தூரத்தில் சின்னக் குன்றின் மீது ஒற்றைக் காலில் நின்று, ஒரு கையை மேலே உயர்த்தித் தவத்தில் ஆழ்ந்திருந்த சாமியாரை உற்றுப் பார்த்துவிட்டுத் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள் புனிதா.
“ நீ போய்ட்டு வா மீனு. பிள்ளைங்க வந்துருவாங்க. நானும் வேலைக்குப் போகணும்,” என்றாள் புனிதா.
புனிதாவின் கணவன் பதினைந்து வருடங்களுக்கு முன் ஓடிவிட்டான். அதன்பின் ஒற்றையாய் நின்று குழந்தைகளை ஆளாக்குகிறாள் புனிதா.
ஒரு மகன். ஒரு மகள்.அவர்கள் படிக்க வேண்டும், மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் எனப் பல போராட்டங்கள் அவள் வாழ்வில். ஏழ்மை.
ஊருக்குப் புதிதாக வந்திருந்த சாமியார் சகல சக்தியும் படைத்தவர் என்று கேள்விப்பட்டுத்தான் புனிதாவை அங்கு அழைத்து வந்திருந்தாள் மீனு. ஆனால், புனிதா தூரத்திலேயே நின்றுவிட்டாள்.

“நீ. பாக்கலையா?”
“இத்தனை வருடங்கள் முயற்சி செஞ்சு இவர் இவ்வளவு சித்திகளைக் கத்துக்கிட்டது பெருசு இல்லை மீனு. வாழ்க்கையோட போராட்டங்களை எதிர்த்து நின்னு அதை ஜெயிக்கிறதுதான் மிகப்பெரிய சித்தி!”

“என்ன சொல்ற நீ?”

“சித்தார்த்தனை விட ‘யசோதரைகள்’தான் அளவற்ற சக்தி படைத்தவர்கள்!” என்றாள் புனிதா.

“புரியல…”

“அவர்தான் என் புருஷன்!” என்றாள் புனிதா அமைதியாக.


122 வார்த்தைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன