
கோடை வெயில் கொளுத்திய மதிய நேரம். கிராமத்தின் தெருவோரத்தில் தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடந்தாள் மீனா.
குழந்தை கண்ணன் பசியால் அழுதுகொண்டிருந்தான். சமீபத்தில் அவளது கணவன் இறந்ததும் அவளுக்கு பிழைக்க வழியின்றி பக்கத்து கிராமத்தில் கட்டிட வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்.
எப்பொழுதும் நேரமாக வேலை முடிந்து திரும்புகிறவள் இன்று தாமதமானதால் குழந்தை பசியால் அழ ஆரம்பித்தது.
அருகிலிருந்த வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த கமலா, அந்தக் குழந்தையின் அழுகையைக் கேட்டதும் எழுந்து வந்தாள்.
“ஏன் குழந்தை அழுகிறது?” என்று கேட்டாள்.
“காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை,” என்றாள் மீனா, கண்களில் கண்ணீருடன்.
கமலா உடனே குழந்தையைத் தன் மடியில் வாங்கிக்கொண்டு, வீட்டிற்குள் சென்று உணவு கொண்டு வந்தாள். குழந்தை பசியாறிச் சிரித்தபோது, இருவரின் மனமும் நிறைந்தது.
“உன்னையும் தினமும் பார்ப்பேன். ஆனால் கேட்க தயக்கம். நீயும் என் சகோதரி மாதிரி. வா நீயும் சாப்பிடு. “என்று சொல்லி மீனாவுக்கும் சாப்பாடு போட்டாள்.
“இனிமேல் கண்ணன் உன் குழந்தை மட்டுமல்ல. நம் குழந்தை,” என்றாள் கமலா.
அந்த ஒரு வார்த்தை மீனாவின் உள்ளத்தை உருக்கியது. அன்று முதல் அவர்கள் இருவரும் உறவினர்களாக அல்ல, ஒரே குழந்தைக்கு இரு தாய்களாக வாழத் தொடங்கினர். அன்புக்கு நிறமோ, உறவுக்குப் பெயரோ தேவையில்லை என்பதை அந்தச் சிறுவனின் புன்னகை தினமும் சொல்லிக்கொண்டிருந்தது.
