
மஞ்சள் பிள்ளையாரின் தாத்பர்யம்
எந்த பூஜை விழா ஆனாலும் முதலில் ஏன் மஞ்சள் பிள்ளையார் பிடித்து பூஜை செய்கிறோம் தெரியுமா?
பெரியவர்கள் எதை செய்தாலும் முழு முதற் கடவுளான பிள்ளைக்கு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து முதலில் அதை பூஜித்த பின்னரே நமது பிரதான பூஜை செய்கிறோம் . மஞ்சளில் பிள்ளையார் செய்து முதலில் அதை வழிபடுவது வழக்கம் …..
உண்மையில் மஞ்சள் பிள்ளையார் உருவான கதை தெரியுமா… ஒரு முறை சிவபெருமான் பார்வதி தேவியை பார்க்க வருவது அறிந்து தேவி தன்னை அலங்கரிக்கும் முகமாக குளிக்க சென்ற போது நந்தி தேவர் காவலுக்கு இல்லாததால் மஞ்சளால் ஒரு சிறுவனை செய்து அதற்கு உயிரும் கொடுத்து விக்னம் நீக்குபவன் என வினை நீக்கும் நாயகனாக விநாயகர் என பெயர் சூட்டினாள். மேலும் தேவி தயார் ஆகி வரும் வரை யாரையும் உள்ளே வர அனுமதிக்க கூடாது என கூறினாள். அன்னை பேச்சை தட்டாத பிள்ளையான அவர் கைலாயம் வந்த பெருமான் சிவனையே உள்ளே விடாத போது …சிவனின் கோபம் யார் எவர் என்று பார்க்குமா அவர் கோபம் திரிசூலத்தால் மஞ்சள் விநாயகர் தலையை கொய்தது … அன்னை பார்வதி படைத்த மஞ்சள் சிறுவனாயிற்றே …
அவ்வளவுதான்…. நடந்ததை தெரிந்து கொண்ட பார்வதி தேவியோ கொண்ட கோபத்திற்க்கு அளவே இல்லை . இந்த உலகத்தையே அழிக்க முற்பட்டாள்.. …பிரம்மதேவன் போன்றவர்கள் தேவியிடம் மன்றாடி அவ்வாறு செய்ய வேண்டாம் என கூறிய போது தேவி சிவனிடம் இரண்டு நிபந்தனைகள் விதித்தார் .. ஒன்று விநாயகரை உயிர்த்தெழ செய்ய வேண்டுமென்றும் , இரண்டாவதாக விநாயகரையே அனைவரும் முழு முதற் கடவுளாக வணங்க வேண்டும் . …அதை சிவ பெருமான் ஏற்று கொண்டு விநாயகரை உயிர்ப்பித்தார் .
அன்று முதல் விநாயகர் முழுமுதற் கடவுள் ஆனார் . எந்த சுப நிகழ்ச்சி ஆனாலும் மஞ்சள் பிள்ளையார் பிடித்து முதலில் அவரை பூஜித்தால் நிர்விக்கினமாக கார்ய அளிப்பார் நம் மஞ்சள் விநாயகர் . மஞ்சள் பிள்ளையாரை வழிபட்டால் கார்ய சித்தியும் சௌபாக்கியமும் கிடைக்கும் .
