S.L. நாணு/கவலை


மனோதத்துவ மருத்துவர் முருகேஷ் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தார்..
அவன்.. விக்னேஷ்.. வயது இருபத்தி ஆறு.. கரு கருவென்று அடர்த்தியான முடி.. அதே அடர்த்தியில் மீசை.. சொல்லப் போனால் நடிகர் ஆர்யா சாயல்..
விக்னேஷின் முகத்தில் கொஞ்சம் கலவரம் தெரிந்தது.. கைகள் பதட்டத்தில் ஒன்றோடு ஒன்று பிணைந்துக் கொண்டிருந்தன..
“ம்.. சொல்லுங்க.. எத்தனை நாளா கனவு வருது?”
முருகேஷ் கேட்டதும் அவன் மெதுவாக ஆரம்பித்தான்..
“கிட்டத்தட்ட ஒரு மாசமா டாக்டர்.. நிம்மதியாத் தூங்க முடியலை.. எப்பப் பாரு அந்தக் கனவோட நினைவு தான்.. இதனால ஆபீஸ்ல சரியா வேலை பண்ண முடியலை.. மத்தவங்களோட ஒழுங்காப் பேச முடியலை.. எப்பவும் அந்தக் கனவோட நினைப்புல..”
முடிக்க முடியாமல் இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டான்..
அவனாகப் பேசட்டும் என்று முருகேஷ் காத்திருந்தார்..
அனுமதி கேட்காமலே மேஜையில் இருந்த குப்பியியை எடுத்துத் தண்ணீர் குடித்தான்.. பிறகு ஆசுவாசப் படுத்திக் கொண்டு..
“கனவைச் சொல்லட்டுமா?”
“ம்.. சொல்லுங்க”
“நான் பைக்குல வேகமா போயிட்டிருக்கேன்.. ராயல் என்பீல்ட் பைக்.. புதுப் பொண்டாட்டி மாதிரி பள பளன்னு இருந்தது.. அது ஒரு காட்டுப் பிரதேசம்.. சுத்தி மலை.. மரம்.. செடி கொடிகள்.. நடுவுல மட்டும் நீரோடை மாதிரி வண்டி போக பாதை”
“சரி..”
“பாதை வெரிச்சுன்னு இருந்ததால நான் வண்டியோட வேகத்தை வேகப் படுத்தறேன்.. எதிர் காத்து வீசுது.. அதை எதிர்த்து வண்டி வேகமாப் போகுது.. கொஞ்சம் சிலிர்ப்பா இருக்கு.. ஆனா எனக்கு ஒரே ஆனந்தமா இருக்கு..”
இதைச் சொல்லி விட்டு உடம்பை சிலிர்த்துக் கொண்டான் விக்னேஷ்.. கண்களை மூடிக் கொண்டு அந்த சிலிர்ப்பை சில விநாடிகள் அனுபவித்தான்..
“பாதைல ஒரு வளைவு வந்தது.. வண்டியோட வேகத்தை நிதானப் படுத்தினேன்.. வளைவுல திரும்பி கொஞ்ச தூரம் போன உடனே திடீர்னு ஒரு பெண்ணோட அலறல் சத்தம்.. நான் திடுக்கிட்டு வண்டியை நிறுத்தினேன்.. நாலாப் பக்கமும் திரும்பிப் பார்த்தேன்.. எதுவும் தென்படலை.. சரி பிரமை போலருக்குன்னு வண்டியைக் கிளப்பினேன்.. மறுபடியும் ஒரு பெண்ணோட அலறல்.. இந்தத் தடவை கூடவே அழுகை சத்தமும் கேட்டுது.. உடனே இறங்கி சத்தம் வந்த திசையை நோக்கிப் போனேன்..அங்க.. அங்க.. ஒரு ஆளு மலை சாதிப் பெண் ஒருத்தி கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணிட்டிருந்தான்”
இதைச் சொல்லும் போதே விக்னேஷின் முகத்தில் பதட்டம் தெரிந்தது..
“ரிலாக்ஸ் விக்னேஷ்.. பதட்டப் படாதீங்க..நிதானமாச் சொல்லுங்க”
டாக்டர் முருகேஷ் அவனை ஆசுவாசப் படுத்த முயன்றார்..
சுதாரித்துக் கொண்டு விக்னேஷ் மறுபடியும் தொடர்ந்தான்..
“நான் உடனே ஓடிப் போய் அந்த ஆளை பிடிச்சு இழுக்கறேன்,, ஆனா அவன் அந்தப் பெண்ணை விடலை.. அந்தப் பெண் ஓன்னு அழுதிட்டே அலறுது.. எங்கேர்ந்து தான் எனக்கு அந்த பலம் வந்துதோ தெரியலை.. அவன் முதுகுல ஓங்கி காலால உதைச்சேன்.. அவன் நிலை தடுமாறிப் போய் தரைல விழுந்தான்.. அவன் பிடிலேர்ந்து விடுதலையான அந்தப் பெண் தப்பி ஓடினா.. அவன் எழுந்துக்கறதுக்கு முன்னால அவ பிடிக்க முடியாத தொலைவு போயிட்டா.. இதைப் பார்த்து அவனுக்கு ஒரே ஆத்திரம்.. உடனே என் பக்கம் திரும்பி என்னைக் கன்னா பின்னான்னு தாக்கினான்.. நான் சுதாரிச்சுக்கறதுகுள்ள என் முகத்துல.. கையிலன்னு அவன் கொடுத்த அடியோட சுவடுகள் பதிஞ்சுருத்து.. வலி தாங்க முடியாம கத்தறேன்.. அந்த வலிலயும் திரும்பிப் பார்க்கறேன்.. அந்தப் பெண் காட்டுப் பகுதிகுள்ள மறைஞ்சு போயிருந்தா.. நிம்மதியா இருந்தது.. ஆனா அவன் அடிய மட்டும் நிறுத்தவே இல்லை.. சோர்ந்து போற வரை அடிச்சு என்னைக் கிழிஞ்ச நாராக்கிட்டான். நான் ஐயோ ஐயோன்னு கத்தறேன்.. அப்படி கத்திக்கிட்டிருக்கும் போதே முழிப்பு வந்துடறது.”
முருகேஷ் கொஞ்சம் யோசித்தார்..
“விக்னேஷ்.. இதே கனவு தான் தினம் தினம் வருதா?”
“ஆமா டாக்டர்.. சிலபஸ் மாறாம இதே கனவு தான் தினம் தினம் வருது.. அதுவும் விடிகாலைல தான் வருது.. கரெக்டா நான் ஐயோ ஐயோன்னு கத்தும் போது முழுப்பு வந்துடறது”
“ஐ ஸீ”
“ஆமா டாக்டர்.. இந்தக் கனவோட பாதிப்புனால.. மனசுல எப்பப்பாரு ஒரு கவலை.. இந்தக் கவலைனால வேற எந்த வேலையும் ஓட மாட்டேங்குது.. வீட்டுல.. ஆபீசுல.. எல்லாரும் உனக்கு என்னாச்சு.. ஏன் ஒரு மாதிரியா இருக்கேன்னு கேட்கறாங்க”
“ம்.. “
”வழக்கமா ஆபீஸ் வேலைலாம் கச்சிதமா முடிக்கறவன்.. இப்ப இந்தக் கவலைனால தப்புத் தப்பாப் பண்றேன்.. எனக்கே அசிங்கமா இருக்கு”
“ம்..”
“டாக்டர் விடிகாலைல வர கனவு பலிக்கும்னு சொல்லுவாங்க.. அதே மாதிரி நான் காணற கனவும்..”
முருகேஷ் அவனை தைரியப் படுத்தினார்.
“பலிக்கட்டுமே.. தாராளமா உங்க கனவு பலிக்கட்டும்.. அது நல்லது தானே? ஒரு பெண்ணோட மானத்தைக் காப்பாத்தப் போறீங்க”
“ஐயோ டாக்டர்.. அது தானே என் கவலையே”
“என்ன சொல்றீங்க?”
”என் கனவுப் பிரகாரம் நான் வேகமா பைக்குல போறேன்”
“ராயல் என்பீல்ட் பைக்”
“கரெக்ட்.. நான் வேகமா பைக்குல போனதுனால தானே சரியான நேரத்துக்கு அங்க போய் அந்தப் பெண்ணைக் காப்பாத்த முடிஞ்சுது”
“ஆமா. கண்டிப்பா”
“அங்க தான் டாக்டர் பிரச்சனையே.. அது தான் என் கவலையே”
“இதுல என்ன பிரச்சனை?”
“டாக்டர்.. எனக்கு பைக் ஓட்டத் தெரியாதே.. நீங்களே சொல்லுங்க.. பைக் ஓட்டலைன்னா எப்படி நான் அந்தக் காட்டுப் பாதைல வேகமா போக முடியும்? நான் எப்படி சரியான நேரத்துக்குப் போய் அந்தப் பெண்ணைக் காப்பாத்த முடியும்?.. ஐயோ.. அந்தப் பெண்ணோட நிலமை அவ்வளவு தான்.. அந்த ஆளு அவளை நாசம் பண்ணிரப் போறான் டாக்டர்.. நான் என்ன பண்ணுவேன்.. நான் என்ன பண்ணுவேன்”
புலம்பிய அவனை டாக்ட்டர் பார்த்த பார்வை….
இறுதியாக வந்த செய்தியின் படி விக்னேஷ் வலுக்கட்டாயமாக டாக்டர் முருகேஷின் மன நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருக்கிறான்..
“ஐயோ நான் பைத்தியம் இல்லை.. என் நண்பர்கள் கிட்ட டாக்டரைக் குழப்பிக் காட்டறேன்னு பெட் கட்டினேன்.. அதுக்காக சும்மா நடிச்சேன் அவ்வளவு தான்”
என்ற விக்னேஷின் புலம்பல் அங்கிருந்தவர்கள் காதில் விழுந்தாலும் விழாதது போல் இருந்தார்கள்.

2 Comments on “S.L. நாணு/கவலை”

Comments are closed.