வற்றாத பிரியங்கள்/நாறும்பூநாதன்

” மாமா..எத்தன மட்டம் போன் அடிக்குறது..எடுக்கவே மாட்டேங்குற..”
சுடிதார் போட்டிருந்த அந்தப்பெண் சிணுங்கினாள்.
……………….”
” ஆமா..நீ எப்பவும் பிஸிதான்..ஒனக்கு சட்டை அளவு நாப்பது தானே..”
………………….
” மொதல்ல நான் கேட்டதுக்குப்பதிலை சொல்லு..நாப்பதா..நாப்பத்தி ரெண்டா..நானும் அம்மையும் ஆரெம்கேவில நிக்கோம்..சீக்கிரம் சொல்லு..”
……………..
” ஆமா..எடுப்பே எடுப்பே.. தீவாளிக்கு மொத நாலு போயி எடுப்பே..எனக்கு தெரியாதா..நான் எடுக்குறத போடு மொதல்ல..நாப்பது தானே..ஆங்..ஞாபகம் இருக்கு..பங்குனி உத்திரத்துக்கு குல தெய்வம் கோயிலுக்கு போகுறப்ப வாங்கும்போது சொன்னே..இருந்தாலும் இன்னொரு மட்டம் கேட்டுக்குவோமேன்னு தான்..”
…………………..
” என்ன கலரா.. உங்க யான கருப்பு நெறத்துக்கு என்ன கலரு சட்டை போட்டா நல்லா இருக்கும்னு எங்களுக்கு தெரியும் மாமா..”
………………….
” வாட்ஸ் அப்புல எல்லா அனுப்ப முடியாது..நா வாங்கி தரரத தான் போடணும் சரியா..பேண்ட் எடுக்கல..அதுக்கு நீ வந்தாதான் சரியா இருக்கும் மாமா.. வேட்டி ஒன்னு எடுத்துருதேன்..ஒட்டுற வேட்டி இருக்குல்ல..ராம்ராஜ் வேட்டி..ஆங்..”
…………….
” நான் ஊருக்குப் போறதுக்கு முன்னாடி வந்து வாங்கிக்கோ..அம்மை பக்கத்துல தான் இருக்கா..பேசுறியா..”
அந்த இருபத்தைந்து வயது பெண், தனது கைப்பேசியை லேசாக துடைத்து விட்டு பக்கத்தில் இருந்த அம்மையிடம் கொடுக்க,
” செவஞானமா…நல்லா இருக்கியா..ஒம்மருமக ஒனக்கு ஒரு சட்டையும் வேட்டியும் எடுத்துருக்கா..நல்லா இருக்கு..என்ன கலரா..அது என்னட்டி கலரு..என்னவோ கிரீமு கலராம்..என்ன கலருன்னா என்ன..மருமக வாங்கி தாரத வாங்கிக்கோ..பார்வதி நல்லா இருக்காளா..புள்ளைகளுக்கெல்லாம் தீவாளி துணி எடுத்தாச்சா..சரி..நாளைக்கு ஒரு எட்டு வீட்டுக்கு வந்துட்டுப்போ..வச்சிரட்டுமா..”
அந்த அம்மா போனை மகளிடம் கொடுத்தாள்.


ஆரெம்கேவி கடையில், எனக்கு எதிராக நடந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
மாமாவை ” நீ ” என உரிமையோடும், அன்போடும் பேசும் அந்தப்பெண்ணும், அவள் ஆசையோடு எடுத்திருந்த சட்டையும் வேட்டியும் ….அன்பு சூழ் உலகு..!

முகம் தெரியாத அந்த சிவஞான மாமாவை பார்க்க வேண்டும் போலிருந்தது.

3 Comments on “வற்றாத பிரியங்கள்/நாறும்பூநாதன்”

  1. வழக்கில் மறந்து போன வார்த்தைகள் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட கதை

Comments are closed.