
வரலக்ஷ்மி நோன்பு கொழுக்கட்டை எல்லாம் ரொம்ப பஞ்சுபோல வந்தது. மங்களம் மாமி ” அம்பா ஒன்னோட அனுக்ரகம்தான். மாவு நன்னா வந்துருக்கு. உன்னோட கருணை தாண்டீம்மா” என்று சொல்லிக்கொண்டே நைவேத்தியங்கள் செய்து பூஜையும் செய்து முடித்தாள்.
பிறகு எல்லா சாமிக்கும் பூ சாற்றினாள். விநாயகருக்கு சாற்றும் போது “பிள்ளையாரப்பா ஒன்னோட பண்டிகைக்கும் கொழக்கட்டை மாவு ஜம்முனு மெத்துனு, விள்ளாம வரமாதிரி பாத்துக்கணும் சொல்லிட்டேன். அப்பதான் ஒனக்கு சாஃப்டான சூப்பர் கொழக்கட்டைக் கிடைக்கும். என்ன ஓகே தானே?” என்றாள் மங்களம் மாமி.
“என்னது மாவு நா கிளறுனுமா? நன்னாத்தான் இருக்கு. அதுக்கு முன்னாடி கண்ணனுக்கு நன்னா கரகர மொறுமொறுன்னு நெய்யிலேயும் எண்ணெயிலேயும் சீடையும் முறுக்கும் பண்ணித் தருவேள். மெத்து மெத்துனு தர கொழக்கட்டைக்கும் மாவு நன்னாருக்க நா பாத்துக்கணுமாக்கும்? பரவாயில்ல, பல்லு ஒடையாது. என்ன பண்றது! கண்ணன் வேற டீல் பண்ணிருக்கான். அவன் சீடை முறுக்கு தரதினால நான் அப்பம் கொழக்கட்டைத் தரணுமாம். என்ன பண்றது? பாத்துக்க வேண்டியதுதான்” என்று மானசீகமாக சொல்லிக் கொண்டார் விநாயகர்.
“ஒன்னோட கருணேயே கருணைப்பா விநாயகா. மாவு எவ்வளவு நன்னா வந்துருக்கு. வேணுங்கறது எடுத்துக்கோ” என்றாள் மங்களம்.
கண்ணனும் விநாயகரும் நைவேத்தியத்திற்கு காத்திருந்தார்கள்.
மடிப்பாக்கம்
