கே.சரண்யா/சிரிக்கும் பிள்ளையார்

“இங்க பாருங்கம்மா.உங்க பொருளை பத்திரமாக வச்சுகிறது உங்க பொறுப்பு. பொது இடங்களில் அதுவும் போட்டிகள் நடக்கிற இடத்தில் கவனமாக இருக்க வேண்டாமா? என்று அலட்சியமாக சொன்ன பிரின்ஸிபால் முன் அழுதுக்கொண்டு நின்று இருந்தாள் பர்ஸை தொலைத்த ரமா. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அந்த பெரிய பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற போட்டிகளில் தன் மகன் ப்ரணவை பங்கேற்க வைக்க அழைத்து வந்திருந்தாள். வந்த இடத்தில் யாரோ அவளது பர்ஸை ஹாண்ட்பேக்கின் ஜிப்பை திறந்து எடுத்து இருக்கிறார்கள்.“
“சார் பஸ்ஸிற்கு கூட காசில்லை” என்று வருந்தியவளிடம் , “போங்கம்மா, வெளியே ஒரு பிள்ளையார் இருக்காரு. அவர்கிட்ட சொல்லுங்க”என கிண்டலாக சொல்லவும் க்ளுக்கென அவள் கண்களில் விழி நீர் எட்டிப் பார்த்தது.“
அங்கே அழகாய் சிரித்தப்படி வலக்கையில் கொழுக்கட்டையுடன் துதிக்கையை வளைத்து அமர்ந்து இருந்தார் பாலவிநாயகர். நீயும் என்னைப் பார்த்து சிரிக்கிறியா? என்னால் இவனை அழைத்துக்கொண்டு பக்கத்து ஊரில் இருக்கும் எங்க வீட்டுக்கு நடந்து போக முடியுமா? என்ன செய்ய போறேன்? வழிக்காட்டு பிள்ளையார்ப்பா என கண் கலங்கினாள். .
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு காத்து இருந்தாள் தன் மகன் வெற்றி பெற்றானா என தெரிந்துக்கொள்ள . விழா ஆரம்பித்து ஒவ்வொரு பெயராக அழைத்தனர்.
“அம்மா என் பெயரை கூப்பிடலையே,வா போலாம்,” என கையை பிடித்து இழுத்தான் ப்ரணவ்.
“இன்னிக்கு நேரம் சரியில்லை ,சரி வா”என்று எழுந்து நகர்ந்தாள் அவள். நாலு அடி நடப்பதற்குள் ஒலிப்பெருக்கியில் சிறப்பு பரிசை பெறும் ப்ரணவ் என அறிவிக்கவும் சரியாக இருந்தது.அதை ஓடிப்போய் வாங்கி ,”இந்தம்மா” என கொடுத்தான். கவரை பிரித்ததும் கண்முன் பிள்ளையாரின் சிரிப்பு நினைவிற்கு வந்தது ,அதில் இருந்த ஐந்நூறு ரூபாயில் காந்தி தாத்தா சிரிப்பதை கண்டு.

வார்த்தைகள் 177
நன்றி

ஸ்ரீரங்கம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன