
காலை நேரத்து அமைதியை உடைத்துக்கொண்டிருந்தது சிற்பி மாணிக்கத்தின் உளிச் சத்தம்.
ஊரின் எல்லையிலிருந்த ஒரு பழைய கருங்கல்லை செதுக்கத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.
அந்தக்கல் மிகவும் கடினமானது. பலமுறை மாணிக்கத்தின் உளிகள் உடைந்துபோயின; அவனது கைகளில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன.
ஊர்மக்கள் ,
“இந்தக் கல்லில் வடிவம் கொண்டுவருவது சாத்தியமில்லை, வேறொரு மிருதுவான கல்லைத் தேர்ந்தெடு” என்றனர்.
ஆனால் மாணிக்கம் மனம் தளரவில்லை. “ஒவ்வொரு கல்லுக்குள்ளும் ஒரு இறைவன் மறைந்திருக்கிறான். அதை வெளியே கொண்டுவருவதுதான் என் கடமை” என்று புன்னகையுடன் கூறினான்.
விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் மாலை. மாணிக்கம் தன் கடைசி வெட்டைச் செய்து முடித்தான்.
தும்பிக்கை, பெரிய வயிறு, அமைதியான கண்கள் என ஒரு கம்பீரமான கருங்கல் பிள்ளையார் சிலை உருவாகியிருந்தது.
ஒரு புரம் மட்டும் கொஞ்சம் கரடு முரடாக
இருந்தது.
கோயிலில் அந்த கருங்கல் பிள்ளையார் பிரதிஷ்டை செய்யப்பட்டார். காலையில் சூரிய ஒளி சிலையின் மீது பட்டபோது, அந்த கரடுமுரடான பகுதி ஒரு தெய்வீக ஒளியைப் போல மின்னியது.
மக்கள் அனைவரும் அந்தச் சிலையின் கம்பீரத்திலும், அதில் தெரிந்த உழைப்பின் நேர்த்தியிலும் சொக்கிப் போனார்கள்.
