பார்வதி-பிள்ளையாருக்கும் நேரம் சரியில்லையோ?

இன்னிக்கு சங்கடஹர சதுர்த்தி. பழைய ஃபிளாட்டுக்குப் போய் சதுர்த்தி அபிஷேக ஆராதனை பார்த்து வரலாம் என்று கிளம்பினாள் ராகவி. அங்கே அவள் சென்று கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும்.

திடீரென்று அந்தப் பிள்ளையார் நியாபகம் வர அங்கே சென்றாள். சதுர்த்தி நடப்பதற்குண்டான எந்த அறிகுறியும் தெரியவில்லை. கோலம் கூட யாரும் போடவில்லை. பிள்ளையாரைச் சுற்றி ஒரே குப்பையும், கூளமும்.

அவள் அங்கு வசிக்கும் பொழுது, எந்த விசேஷமென்றாலும் பெரிதாகக் கோலம் போடுவாள். அதைப் பார்த்து எல்லோரும் என்ன விசேஷம் என்று விசாரிப்பார்கள். விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, வருடப் பிறப்பு என்று எல்லா விசேஷங்களும் விமரிசையாக நடக்கும். பூவும், அபிஷேக சாமான்களும் நிறைந்திருக்கும். பக்கத்து, எதிர்த்த ஃபிளாட்டுகளிலிருந்தும் எல்லோரும் வந்து தரிசனம் செய்வர்.

விசாரித்ததில் ஃபிளாட்டுக்குள் நடந்த தண்ணீர் சண்டையில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லையாம். பிள்ளையாரைப் பார்ப்பதைக் கூட எல்லோரும் தவிர்த்து வந்தனர்.
பிள்ளையார் கவனிப்பாரற்று, பாவம் போலக் காட்சியளித்தது மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. ஆனால் அவர் ஒவ்வொருவரையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது.

மனதார வேண்டிக் கொண்டு, அவருக்கும் நேரம் சரியில்லையோ என்று யோசித்தவாறு, வீட்டுக்குத் திரும்பினாள் ராகவி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன