ரிஷபன்/இரண்டாவது இன்னிங்ஸ்

சட்டென்று தான் அந்த நாலு கால் மண்டபம் பிரபலம் ஆனது.

வயதானவர் ஒருவர் ஆற்றில் குளித்து விட்டு கரையேறி அந்த நாலு கால் மண்டபத்திற்கு வந்து உட்கார்ந்தார். அசதியில் தூணில் சாய்ந்தபோது ஒரு பிஞ்சுக் குரல் கேட்டது.

“தாத்தா என் மேல் சாயாதீங்கோ”

பதறிப் போய் எழுந்தால் எதிரே ஒரு பொடியன்.

“என்னப்பா சொல்ற”

“பின்னாடி தூண்ல பாருங்கோ”

தூணில் இத்தனை காலத் தூசியைச் சுமந்து மங்கிய நிலையில் பிள்ளையார் !

பெரியவர் திரும்பிப் பார்த்தார். சிறுவன் முன்னால் ஓடிக் கொண்டிருந்தான்.

என்ன தோன்றியதோ, பெரியவர் ஆற்று நீரைக் கொண்டு வந்து நன்றாகத் தேய்த்து அலம்பினார். விபூதி அபிஷேகம் செய்தார்.

அடுத்தடுத்த நாட்களில் பூக்கடை, பழக்கடைகள் வந்தன.
பெரியவர் இப்போது பிஸி.

வீட்டுக்குப் போனால் ராஜ மரியாதை.

‘தினம் இருநூறு ரூபாயாவது கொண்டு வரார்.’ மருமகள் குதூகலம்.

ஓய்வு பெற்றதும் மொத்தப் பணத்தையும் மகனிடம் கொடுத்து விட்டு அலட்சியப்படுத்தப்பட்ட பெரியவருக்கு இப்போது இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம் !

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன