
கையில் நூறு ரூபாய்தான் இருந்தது. இதற்குள் 108 கோதுமை கொழுக்கட்டை செய்ய முடியுமா? சாமான்கள் எல்லாமே வாங்க வேண்டும்.
சோமு யோசித்தான்.
ஜோசியர் உறுதியாகச் சொன்னார், “உன் கிரகங்கள் எல்லாம் மோசமான கட்டத்தில் நிற்கின்றன. பிள்ளையாருக்கு 108 கோதுமை கொழுக்கட்டை செய்து பிரார்த்தனை செய், நிச்சயம் வேலை கிடைக்கும்.” என்று.
சோமுவும் கல்லூரி முடிந்து மூன்று வருடங்களாக வேலை தேடுகிறான்.
விதவைத் தாய், தம்பி, தங்கை என்று குடும்பமும் பெரிது.
இந்தப் பிள்ளையார் மிகவும் சக்தி வாய்ந்தவர். ‘விபூதி பிள்ளையார்’ என்று ஊரே கொண்டாடுகிறது. இங்கு வேண்டிக்கோ என்றார் ஜோசியர்.
என்ன செய்வது?
108-க்கு பதிலாக 10 போடலாமா?
கோபத்தில் பிள்ளையார் விளையாடிவிட்டால்?
சோமு குழம்பினான்.
இன்று ஒரு நேர்காணல் வேறு.
கோவில் வாசலில் பிச்சைக்காரியின் குழந்தை வீறிட்டுக் கொண்டிருந்தது.
“ஏன் இப்படி அழுவுது?”-சோமு.
“பசிங்க”- குழந்தையின் பசி தீர்க்க முடியாத தன் நிலைமை எண்ணி அவள் கண்கள் கலங்கியது.
சோமு அவளையே பார்த்தான்.
“இந்தா. குழந்தைக்குப் பால் வாங்கி ஊத்து” என்று நூறு ரூபாயை அவள் கையில் கொடுத்து விட்டு நகர்ந்தான்.
“உனக்கு இன்று வேலை கிடைக்கும்” என்றது பிள்ளையாரின் ஆசிர்வாதம்.
கோவை.
