
பிள்ளையாரைப் பார்த்து விட்டு அம்மாதான் அலறினாள் “பிள்ளையாருக்கு என்னமோ ஆயிடுத்து “.
ஏதோ தெய்வ குற்றம் ஆகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கன்னங்கரேல் என்று காலையில் நைவேத்யம் செய்யும் போது கூட இருந்தவர் அதற்குள் எப்படி இப்படி வெள்ளை வெளேர் என்று ஆக முடியும்?
பிள்ளையாரைக் கேட்டிருந்தால் அவர் ஒரு பாட்டம் அழுதிருப்பார். காரணம் அவருக்கும் கணேசனுக்கும் மட்டுமே தெரிந்திருந்தது.
கணேசன் வீட்டில் ஒரு சிறு கல்லுப் பிள்ளையார் உண்டு. ரொம்ப அழகெல்லாம் கிடையாது. மொழுக்கென்று ஆனால் பிள்ளையார் என்று எளிதில் கண்டு பிடித்து விடலாம்.
அவரோடு கூட இரண்டு பித்தளையோ தாமிரமோ, பொருந்துகிற மாதிரி மூடி பொருத்திய இரண்டு டப்பாக்கள் நிறைய சாளக்கிராமங்கள் இருக்கும்.
கணேசனின் அப்பா நைவேத்யம் செய்யும் போது மட்டும் அந்த டப்பாக்களைத் திறந்து உள்ளே ஒரு பூவைப் போட்டு உடனே மூடி வைத்து விடுவார்.
கணேசன் நெடுநாள் டப்பாக்களைத் திறந்து வைத்தால் சாளக்கிராமங்கள் காற்றில் ஆவியாகி விடும் என்று நம்பிக் கொண்டு இருந்தான்.
பிள்ளையார், பீடத்தோடு கூடிய ஒரு வெள்ளி வேல், மேற்படி இரண்டு டப்பாக்கள், மரத்தாலான ஒரு விபூதி மடல் (அதில் இருந்து தான் விபூதியை அடித்து, இறந்து போன ஒரு பண்ணைத் தொழிலாளியைத் தாத்தா பிழைக்க வைத்தார் என்று ஊரே பேசும். அதனால் அந்த மடலுக்கு என்று ஒரு தனி அந்தஸ்து. ஆனால் தாத்தா ஊஞ்சலில் ஆடிக் கொண்டே தேகாந்தம் அடைந்த போது பாட்டி ஓடிப் போய் அந்த விபூதியை அடித்துப் பார்த்தார். தாத்தா போனவர் தான். திரும்பவில்லை) என்று ஓரிரண்டு ஸ்பெஷல் அயிட்டங்கள் மட்டும் கண்ணாடிக் கதவு கொண்ட தேக்கு மரத்தால் ஆன சிறு பூஜை அலமாரியில் அல்லது பீரோவில் வைக்கப் பட்டிருக்கும். மடி கிடி என்று தீவிரமாக இருந்த காலமாதலால் அதை யாரும் தொடுவதில்லை.
அந்த அலமாரி இன்னொரு நீளமான மர அலமாரியின் மீது வைக்கப் பட்டு இருக்கும். அந்தக் கீழ் அலமாரியில் அந்தளவு முக்கியத்துவம் இல்லாத மற்ற தெய்வங்களின் படங்கள் மாட்டப் பட்டிருக்கும். அவ்வப்போது தாழம்பூ கிடைக்கும் போது அதை லேசாகக் கலைத்து, மாவு உதிர்வதற்குள் கீழ் அலமாரியில் வைத்துக் கதவை சார்த்தி விடுவது வழக்கம். அதற்குள் சுவாசத்திற்காகத் திணறும் சுவாமிகளை நினைத்து கணேசன் அநேகந்தரம் கவலைப் பட்டிருக்கிறான்.
கணேசன் தெருவில் கிரிக்கெட் விளையாடும் பொழுது எப்பொழுதும் டக்கவுட் ஆவதற்கு அந்த தெய்வங்களின் தீராத சாபங்களே காரணம் என்று அவன் தீர்மானமாக நம்பினான்.
அதனால் அவ்வப்போது அந்தக் கதவுகளை வெளியில் தெரியாதவாறு திறந்து வைப்பது அவன் வழக்கம். அதனால் ஒன்றும் தெய்வங்களுக்கு அவன் மீதான கோபம் குறைந்த மாதிரி தெரியவில்லை.
எவ்வளவு முயன்றும் அவனால் ஒரு ரன் கூட எடுக்க முடிந்ததில்லை. விளையாடுகிற மாதிரி முழு விளையாட்டும் வெறுமனே பந்து பொறுக்கிப் போடுவதில் அவனுக்கு சுவாரஸ்யம் போய் விட்டது. அதைவிட ரேடியோவில் கமெண்டரி கேட்பது நன்றாக இருந்தது. அதனால், கொஞ்சம் தேசபக்தி கூட வளர்ந்த மாதிரி தான் இருந்தது.
அம்மாவின் அலறலைக் கேட்டு விட்டு குடித்தனக் காரர்கள் அக்கம்பக்க மாமிகள் என்று நிறையப் பேர் கூடி விட்டனர்.
பிள்ளையார் ஏதோ அதிசயம் செய்து இருக்கிறார் என்று விஷயம் காட்டுத்தீ போல் பரவி திருவாரூர் திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்தெல்லாம் ஜனங்கள் வந்து குவிந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை வந்து விட்டது.
பின்கட்டில் இருந்த பீரங்கிப் பட்டு என்ற மாமி கொஞ்சம் மிடுக்காக வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்தினாள். எட்டு யோஜனை தூரத்தை அனாயாசமாகக் கடக்கும் குரல் அவளுடையது.
வக்கீல் வீட்டுப் பாட்டி அம்மாவிடம் “நாளன்னிக்கு சதுர்த்தி.. பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை பண்றதா வேண்டிக்கோ.. எல்லா விக்னமும் பறந்து போயிடும் “.
விக்னங்கள் பறக்கிறதோ இல்லையோ கொழுக்கட்டை நிமிஷமாய்ப் பறந்து விடும் சாத்தியங்கள் அதிகம்.
காமரா உள் கதவை சார்த்திக் கொண்டு ராஷ்டிர பாஷா பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்த கடைசி அக்கா சத்தம் தாங்காமல் கதவைத் திறந்து கொண்டு வந்தாள். வந்தவள் சாமி அலமாரியில் சுவேத விநாயகராக மாறி இருந்த கல்லுப்பிள்ளையாரை உற்று நோக்கினாள்.
அவளுக்கு ஒரு நொடியில் விளங்கி இருக்க வேண்டும். எதுவுமே தெரியாத மாதிரி அம்மா தலைப்பைப் பிடித்துக் கொண்டு நிற்கும் கணேசனை தீர்க்கமாக முறைத்தாள்.
“என்னை ஏண்டி மொறைக்கறே?”
“அப்ப நீதான்டா ஏதோ திரிசமன் பண்ணி இருக்க “
இப்போது எல்லோர் பார்வையும் கணேசன் மேல் திரும்பியது.
கணேசனுக்குக் கொல்லைப் புறம் ஓடி பாத்ரூம் போனால் தேவலை போல் இருந்தது.
பெரியக்கா நறுக்கென்று ஒரு கிள்ளு வைத்தாள் “என்னடா பண்ணித் தொலைச்சே சனியனே “
கணேசன் திருட்டு முழி முழித்துக் கொண்டு “பிள்ளையாருக்கு விபூதி அபிஷேகம் பண்ணினேன் “ என்றான்.
“அடக் கஷ்டகாலமே? எதுக்குடா?”
“கிர்மானி செஞ்சுரி அடிக்கறதுக்காக “
“கிர்மானியா? யாருடா அது? உங்கூட படிக்கறானா?”
“சீச்சி.. நம்ம விக்கெட் கீப்பர்.. பாவம்.. இதுவரையும் செஞ்சுரியே அடிச்சது இல்லை.. இப்பத்தான் மெதுவா தொண்ணூறு கிட்ட வந்துட்டான்.. காவ்ரி சூப்பரா ஆடி அவனும் அவுட் ஆகிட்டான்.. இன்னும் ரெண்டு விக்கெட் தான் இருக்கு.. தோஷிக்கெல்லாம் கண்ணே தெரியாது.. இப்பன்னு பாத்து டிம்மக்கும் ஹாகும் பயங்கரமாப் போடறாங்க.. அதுவும் ஹாக் கன்னா பின்னானு மூஞ்சிக்கே போடறான்.. எப்படியாவது கிர்மானி செஞ்சுரி அடிக்கணும்மா.. பாவம்மா.. ரொம்ப நல்லவம்மா.. அதுனாலத்தான் அவன் ஒவ்வொரு ரன் அடிக்கும் போதும் பிள்ளையார் மேல ஒவ்வொரு பிடி விபூதி தூவி வெச்சேன்”
கணேசனுக்குத் தொண்டை அடைத்து அழுகை வந்தது.
அம்மாவைக் கட்டிக் கொண்டான்.
கூடியிருந்த ஜனம் திரும்பியது. ஒரு அதிசயமும் செய்யாமல் அமுக்குனியாக இருந்த பிள்ளையார் மேல் எல்லோருக்கும் கோபம் கோபமாக வந்திருக்க வேண்டும்.
பிள்ளையார் வழக்கம் போல் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. அவர் கண் காது தும்பிக்கை வாய் என்று சகல துவாரங்களிலும் விபூதியால் அடைபட்டு மிகவும் கவலைக்கிடமாயிருந்தார்.
ஆனாலும், அவர் கணேசன் பேரில் கோபப் படவில்லை. அவன் அன்பு அவரைப் பாதித்திருக்க வேண்டும்.
தனக்கு அகஸ்மாத்தாக நிகழ்ந்த விபூதிக் காப்பிற்குக் காரணகர்த்தாவான சையத் முஸ்தஃபா ஹுசைன் கிர்மானி தனது முதல் சதத்தை அடைய மனதில் எந்த பேதமும் இல்லாமல் அனுக்கிரகம் புரிந்தார்.

😂