கிரிஜா ராகவன்/கடன்

காஞ்சனாவை அப்படி சட்டென்று பார்த்தது ராகினிக்கு ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு புறம் திக் என்று இருந்தது. பெங்களூர் இந்திரா நகர் மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த ராகினி வேகமாகத் திரும்பிய போது எதிரில் கையில் குழந்தையுடன் வந்த காஞ்சனா மேல் மோதிக்கொண்டாள். ராகினி திகைத்தாலும்,காஞ்சனா
சட்டென்று சுதாரித்துக் கொண்டு “ராகினி..எப்பிடிடி இருக்க? எப்ப பெங்களூர் வந்தே” என்று சரளமாக பேசிய உடன்தான் ராகினிக்கு மூச்சு வந்தது.
பத்தாம் க்ளாஸில் நடந்த விஷயம். காஞ்சனாவின் மாமா அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்த பேனா.பளபளவென்று இருந்தது. ஆசையாய் இருந்ததால் எடுத்துக்கொண்டு விட்டாள் ராகினி. அதித் தெரிந்து கொண்டு விசாரித்த போது கடைசி வரை தான் எடுக்கவில்லை என்று சாதித்தாள். அதற்காகத் தன் அம்மா மேல் சத்தியம் செய்யப் போனவளை காஞ்சனா தடுத்து ஒரு வார்த்தை சொன்னாள்.” ராகினி உண்மை எதுன்னு கடவுளுக்கு தெரியும். விட்டுடு” என்று திரும்பிப் பார்க்காமல் போனவள், மேலே படிக்க சென்னை சென்று விட்டாள். திருடிய பேனாவை உபயோகப்படுத்தவும் இல்லை. ராகினியின் மனசாட்சி அவளைக் குத்தாத நாள் இல்லை.

இப்போது இங்கே பெங்களூரில் இப்படி ஒரு சந்திப்பு.” பேசலாம் வா” ராகினியைப் பாசமுடன் காஞ்சனா காபி ஷாப்பிற்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்ல அவள் கையில் இருந்த யுவனை வாங்கிக் கொண்டாள் ராகினி. பத்து வருஷத்துக் கதையைப் படபடவென்று கொட்டினாள் காஞ்சனா. படிப்பு, வேலை, பெங்களூர்,திருமணம், குழந்தையின்மை, தன்னால் குழந்தையை சுமக்க முடியாத நிலை, மாமியார் கொடுமை, பிறகு நாலு வருஷத்துக்கு முன்னால் ஒரு வாடகைத் தாய் மூலமாக யுவனைப் பெற்றது….” சினேகிதி வெள்ளமாய் சொன்னவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த ராகினி, அங்கே ஒரு நிமிடம் அவளை இடைமறித்தாள். “வாடகை தாயா? எப்போ? எந்த ஊர்? யார் அந்தப் பெண்? எந்த ஆஸ்பத்திரி ?அரேஞ்ச் பண்ண ஏஜென்சி யாரு?”
“இவ்ளோ விவரம் சொல்லல ராகினி. சொல்ல மாட்டாங்க. அந்த வாடகைத் தாய் பெங்களூர் தான். மல்லேஸ்வரம் அஞ்சலி மெட்டர்னிட்டி ஆஸ்பத்திரியில் தான் குழந்தை பிறந்ததாம். ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்னிக்கு காலையில ஆறு பத்துக்கு பிறந்தானாம் இந்த யுவன் குட்டி. அது மட்டும் பர்த் சர்டிபிகேட்ல இருக்கு.” கேட்டுக் கொண்டிருந்த ராகினி சிலையாய் உறைந்து போனாள். அம்மாவும் அப்பாவும் ஆக்சிடெண்டில் ஒன்றாக இறந்து போக யார் தயவிலோ படித்து, தெரிந்தவர் மூலமாக பெங்களூர் வந்து, ஒரு ஏஜென்சியின் அறிமுகத்தில் பணத்திற்காக வாடகைத் தாயாகத் தான் சுமந்தது காஞ்சனா கையில் இருக்கும் இந்த யுவனா? கடவுளுக்குத் தெரியும் என்று சொன்னாளே அவன் தான் தான் திருடிய கடனை அடைக்க வைத்தானா?
ராகினி தன் கதையைக் கேட்டு ஏன் அழுகிறாய் என்று காஞ்சனாவுக்கு புரியவில்லை.


One Comment on “கிரிஜா ராகவன்/கடன்”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன