ஜெ.பாஸ்கரன்/திடீர்ப் பிள்ளையார்!

ரஹீம் பாயின் கறி கடைக்கும், கணேசய்யரின் டிபன் கடைக்கும் இடைப்பட்ட இடம், மாணிக்கத்தின் பூர்வீக சொத்து. கால் கிரவுண்டுக்கும் கொஞ்சம் குறைவு. வீடு கட்டவும் போதாது, வேறு கடை கட்டி, தொழில் செய்யவும் தெரியாது மாணிக்கத்துக்கு! விற்று விடலாம் என்றாலோ, ரஹீம் பாயும், கணேசய்யரும் அடிமாட்டு விலைக்குக் கேட்கிறார்கள். வேறு யாருக்கும் விலை போகாது என்கிற நம்பிக்கை!

அப்போதுதான் மாணிக்கத்தின் இடத்தில் அந்தத் திடீர்ப் பிள்ளையார் தோன்றினார். சிவப்புக் கல்லில் பதித்தாற்போல், கறுமை நிறத்தில், காலடியில் மூஞ்சூருடன், வித்தியாசமாக சுருட்டிய தும்பிக்கையிலிருந்து கொட்டும் நீரில் மனித, மிருக உருவங்கள் உள்ள வித்தியாசமான பிள்ளையார். சிவப்புக் கல்லில் ஆங்காங்கே வெள்ளைக் காரையும் தெரிந்தது.

‘நடுநிசியில் வெடிச் சத்தத்துடன், பூமியிலிருந்து வெளிவந்தது’, ‘கலி முத்திடிச்சு, அதான் பிள்ளையார் தோன்றி விட்டார்’, ‘சுயம்புவா வந்திருக்கார், சக்தி வாய்ந்தவர்’ எனப் பல விவாதங்கள். பூ, பழம், பால், தேங்காய், கொழுக்கட்டையுடன் ஊரே திரண்டு, பிள்ளையாரை தரிசித்தனர். அரசியல்வாதிகள், போலீஸ், பக்தர்கள் என ஏகமாய்ப் பந்தோபஸ்து, மற்றும் விசாரணைகள். அங்கிருந்து அகற்றவும் முடியவில்லை, அங்கேயே வைத்து நம்பவும் முடியவில்லை. குழப்பத்தில் பிள்ளையார்.

திடீர்ப் பிள்ளையாருக்கு, ‘திடீர்’ டிரஸ்டு ஒன்று உருவாகி, சில லட்சம் திரண்டது. அதிசயப் பிள்ளையாருக்குக் கோயில் கட்டி, கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது! திடீர்ப் பிள்ளையாரினால், மாணிக்கத்திற்கும் கேட்ட பணம் கிடைத்தது.

ரஹீம் பாயும், கணேசய்யரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தும்பிக்கையின் பின்னால் பிள்ளையார் சிரித்துக்கொண்டார்!

சுமார் நூறு கி.மீ. தள்ளி, நாத்திகம் பேசும் அரசியல்வாதி ஒருவரின் அடுக்குமாடி கட்டும் நிறுவனம் இடித்த பழமையான வீட்டு வாசலில் பிள்ளையார் இருந்த இடம் காலியாக இருந்தது!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன