
சிறுகதை: முருகனின் ஆசை
அப்பாவோடு வண்டியில் போகும்போது, வழியில் ஒரு கடையில் இந்த பிள்ளையார் படம் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான் முருகன். ” அப்பா, அப்பா, வண்டிய அந்தக் கடைக்கு விடுப்பா, எனக்கு அந்த பிள்ளையார் படம் உடனே வேணும்” என்றான் முருகன். ” ஏண்டா, நான் வண்டிய ஓட்டுவேனா, இல்ல ரோட்ல என்ன இருக்குன்னு
வேடிக்க பாப்பேனா, கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா? ” கத்தினார் வடிவேலு.
” பிளீஸ் பா, அந்தக் கடைக்கு விடுப்பா” வேறு வழியின்றி அந்தக் கடைக்கு வண்டியைத் திருப்பினார். கடைக்கு முன் வண்டியை ஸ்டாண்ட் போட்டார். ” கடைக்கு முன்னாடி நிப்பாட்டாதீங்க சார், வியாபாரம் பாதிக்கும்” சிடு
சிடுத்தார் கடைக்காரர். மகனுக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு, ” நானும் வியாபாரம் பண்ணத்தான் வந்திருக்கேன். அந்த பிள்ளையார் படம் என்ன விலை? ” “ஓ, இதுவா, என்னோட நண்பன் இங்க கொண்டு வந்து மாட்டினான். இது நல்ல அதிர்ஷ்ட பிள்ளையார். உன்னோட கடை பெரிசாகி உனக்கு நல்ல லாபம் கிடைக்கும்னு சொல்லி கொடுத்தான். இது விலைக்குக் கொடுக்க முடியாது” என்றார் கடைக்காரர் கறாராக.
முருகன் முகம் தொங்கிப் போச்சு. ” ஐயா, என் பையன் ஆசப்பட்டான், இது மாதிரி வேற இருந்தா காட்டுங்க” என்றார் வடிவேலு. கடைக்காரர் தன் நண்பனுக்கு ஃபோன் போட்டார். ” செல்வம், நான்தாம்பா குமார் பேசறேன், நேத்து நீ ஒரு பிள்ளையார் படம் கொடுத்தியே, அது மாதிரி வேற பீஸ் இருக்கா? ” இல்ல குமார், நீ எனக்கு ஒரு வாரம் டைம் கொடு, அதே மாதிரி உனக்குப் பண்ணித் தரேன். அதுவும் அதிர்ஷ்ட பிள்ளையார்தான்” என்றான் செல்வம்.
” ஐயா, உங்க மகனுக்கு நான் சும்மாவே தரேன். இந்தக் காலத்துப் பசங்க சாமி படத்தைப் பார்த்து கேட்கிறதே அதிசயம். உங்க மகனுக்கு நல்ல பக்தி. எடுத்துட்டுப் போங்க ஐயா” என்றார் கடைக்காரர். ” ஆமா தம்பி, உன் பேர் என்ன? “
” முருகன் சார்”
” அதான், அண்ணன் மேல அவ்வளவு பாசம்” என்று சிரித்துக் கொண்டே அந்த பிள்ளையார் படத்தைக் கழற்றி நன்றாக பேக் செய்து கொடுத்தார். ” மிக்க நன்றி சார்”
முருகன் சிரித்துக் கொண்டே அந்தப் படத்தை மார்போடு அணைத்துக் கொண்டு அப்பாவோடு ஸ்கூட்டரில் ஏறி உட்கார்ந்தான். முருகன் நல்லா படிக்கணும்னு அந்த பிள்ளையாரை மனதில் வேண்டிக் கொண்டு ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தார் வடிவேலு.
பி.ஆர். கிரிஜா
