
பொன்னியின் கையில் திரிசூலத்தைக் கொடுத்ததும் குஷியாகி விட்டாள்.
தலையில் பொம்மைக் கூடை, இடுப்பில் பொன்னி என்று நகர்வலம் கிளம்பி விட்டாள் வள்ளி.
“பொம்மை வாங்கலியோ பொம்மை”
வீடுகளுக்குள் மனிதர்கள் தொலைக்காட்சி, கைபேசி பொம்மைகளுக்குள் அடிமைப்பட்டிருந்தார்கள்.
எட்டிப் பார்த்த ஓரிருவரும் இல்லாத பொம்மையைக் கேட்டு நோகடித்தார்கள்.
வெய்யில் சுட்டெரித்தது. அதே கூடை தான். இப்போது கனக்க ஆரம்பித்தது.
“பசிக்கிதும்மா” பொன்னி சிணுங்கினாள்.
‘ இன்னும் கொஞ்ச நேரம் தான் கண்ணு. வீட்டுக்குப் போயிரலாம்”
இவளைப் பார்த்தவர் ‘ இப்பல்லாம் யார் கொலு வைக்கிறாங்க’ என்று சொல்லி விட்டுப் போனார்கள்.
“யம்மா பசிம்மா”
வாசலில் சிட் அவுட் வைத்திருந்த வீடு. கூடையை இறக்கி வைத்து பெருமூச்சு விட்டாள்.
“யாருடி அது”
ஒரு பாட்டி வெளியே வந்தார்.
“பொம்மை ம்மா”
” அம்மா பசிக்குதும்மா” பொன்னி அழவே ஆரம்பித்து விட்டாள்.
பாட்டி உள்ளே போனார். திரும்பியபோது கையில் பருப்பு சாதம்.
“புள்ளைக்கு இதை ஊட்டு”
பொன்னி பசியாறியதும் பாட்டி சொன்னார்.
“உயிருள்ள பொம்மையை பசிக்கவச்சு ஏன் சிரமப்படுத்தற”
“வித்தாத்தான்மா வீட்டுல சோறு பொங்கலாம்”
கூடை தலைக்கேறியது. பசியாறிய பொன்னி மீண்டும் திரிசூலத்துடன் இடுப்பில்.
வள்ளியைப் பார்த்தால் ஒரு பொம்மையாச்சும் வாங்குங்க நண்பர்களே !

அன்பு நன்றி