
“பொம்மை வாங்கலையோ பொம்மை..!”
கோகிலாவின் இனிய குரல் அந்தத் தெரு முழுக்க ஒலித்தது. நவராத்திரி வந்து விட்டால் தெய்வச் சிலைகளைக் கூடையில் வைத்து உயிருள்ள சிற்பம் போல நடந்து வரும் கோகிலாவிடம் எல்லோருமே பொம்மை வாங்கப் போட்டி போடுவார்கள். அந்தளவுக்கு உயிரோட்டமான பொம்மைகள் என்பதோடு அவளிடம் பொம்மை வாங்குவதை ராசியாகவும் நினைத்தார்கள் அவ்வூர் மக்கள்.
அவள் குரல் கேட்டதும் எட்டிப் பார்த்த சௌம்யா,
கோகிலாவின் இடுப்பில் அமர்ந்திருந்த பிள்ளையைப் பார்த்ததும் கிறங்கி விட்டாள். இதென்ன இப்படியொரு தெய்வாம்சம் இந்தப் பிள்ளையிடம்?. இவனைக் கருப்பையில் தாங்கிக் கொணடிருக்கும் போது கோகிலா தெய்வச்சிலைகளையே
பார்த்துக் கொண்டும், தெய்வங்களை கைகளால் சிலையாக வடித்துக் கொண்டும் இருந்திருப்பாள்.
அதுதான் இப்படியொரு பேரழகைப் பெற்றிருக்கிறாள்.”
தன் பிள்ளையையே பார்த்தபடி நின்றிருந்தவளிடம் வந்த கோகிலா,
“என்ன சௌம்யாக்கா வெச்ச கண்ணு வாங்காம அப்படிப் பாக்குற..! நீ கேட்ட கண்ணன் பொம்மைய மொதல்ல உனக்கு குடுத்துரணும்னுதான் நேரா இங்க வந்தேன். வேற யாராவது கேட்டா முடியாதுன்னு எப்படி சொல்றது?”
கண்ணன் பொம்மையை அவள் எடுத்து நீட்ட சௌம்யாவோ அவள் இடுப்பிலிருந்த நிஜக் கண்ணனை நோக்கிக் கைகளை நீட்டினாள். அவளும் பாவம் இன்னும்
எத்தனை வருடங்களுக்குத் தான் பொம்மைக் கண்ணனுக்குத் தாலாட்டு பாடுவாள்,?
