
உச்சி வெயிலில் சுட்டெரிக்கும் தார்ச்சாலையில், பகல் முழுவதும் அவள் கால்கள் ஓயாமல் நடக்கின்றன.
நவராத்திரி முடிந்தால் துடைப்பமும் பாயும் விற்றுதான் வாழ்க்கையை ஓட்ட வேண்டும். குடிநோயால் மூலையில் உருளும் கணவனின் போதைக்கும், இடுப்புக் குழந்தையின் பசிக்கும் அவளது உழைப்பே ஆதாரம். தனக்கென ஒரு வாய் கஞ்சி குடிக்கக் கூட நேரமும் பணமும் அவளிடம் இல்லை.
”அம்மா… எனக்குக் கடவுள் வேணும்!” என்று ஒரு செல்வந்தர் வீட்டு வாசல் சிறுவன் கைகாட்ட, ஒரு சுவாமி சிலையை அவனிடம் நீட்டினாள். சிறுவனின் தாய் அவளது வாடிய முகத்தையும், இடுப்பில் பசியோடு இருந்த குழந்தையையும் கவனித்தாள்.
கூடையில் இருந்த அத்தனை பொம்மைச் சிலைகளையும் மொத்தமாக நல்ல விலைக்கு வாங்கிக்கொண்டு, கைநிறைய உணவையும் தந்து, “பக்கத்து பள்ளிக்கூடத்துல ஒரு வேலை இருக்கு, நாளைக்கு வந்து சேரு தாயீ” என்றாள். தூக்கிச் சுமந்த சிவனோ கிருஷ்ணனோ தான் மனித ரூபத்தில் வந்து தன் கண்ணீரைத் துடைத்ததாக எண்ணி அவள் அழுதாள் தொழுதாள் கைகூப்பினாள்.
