பிரேம சாகர லீலை – ரம்யா வாசுதேவன்

பாகவதம் எப்போதுமே என்னை தனக்குள் ஈர்த்துக்கொண்டே இருக்கும் ஒரு மகா சமுத்திரம்; அதிலும் குறிப்பாக அதன் தசம ஸ்கந்தம் என்னை ஏதோ ஒரு மாய உலகிற்குள் கட்டிப்போட்டுவிடும்.
பிருந்தாவனத்தை விட்டுப் புறப்பட்ட கண்ணன், தன் வாழ்நாளில் மீண்டும் அங்கே திரும்பிச் செல்லவே இல்லை என்ற உண்மை எனக்குள் எப்போதும் தீராத பல கேள்விகளையும் ஒருவித கனத்த ஏpassக்கத்தையும் எழுப்பிக் கொண்டே இருந்தது.

‘ஒருவேளை… அந்தப் பிரிவின் தாளாத துயரத்தோடு கோபிகைகளே கண்ணனைத் தேடிப் புறப்பட்டுச் சென்றால் எப்படி இருக்கும்?’ என்ற என் உள்ளுணர்வின் தவிப்பில் உதித்ததே இந்தச் சிந்தனை.

கண்ணன் இல்லாத யசோதையை நேருக்கு நேர் எதிர்கொள்ள எனக்கு இப்போதும் அச்சமாகவே இருக்கிறது. தன் மடியில் தவழ்ந்த சின்னக் கண்ணன் இல்லாத வெற்று இல்லத்தை அவள் எப்படித் தாங்கிக் கொண்டிருப்பாள்?

எனினும், அந்த லீலா மாயனின் மாயம் யசோதைக்கு அவளது பால கிருஷ்ணனை அவளுக்குள்ளேயே என்றும் விளையாட வைத்துக் காத்துக் கொண்டிருக்கும் என்ற மெல்லிய ஆறுதல் மட்டுமே எஞ்சுகிறது.
அந்தத் தீராத விரகமும், விடை தேடும் என் மனதின் தவிப்பும் இணைந்து உருவான ஒரு கற்பனைப் பெருவெளியே இந்தச் சிறுகதை.

Thanks to Krishna Krishnamoorthy இந்த கதையை பல முறை பேசி பேசி தாங்க முடியாமல் கண்ணீரால் நிறுத்தி இருக்கிறோம்.


பிரேம சாகர லீலை – ரம்யா வாசுதேவன்

“நான் எப்போது ராதையாக மாறுவது கண்ணா?

நான் எப்போது ராதையைக் காண்பேன்?”

அந்தக் கேள்வி சமந்த பஞ்சகத்தின் காய்ந்த புழுதிப் பெருவெளியில் ஒரு தர்மசங்கடமாய் மோதி அதிர்ந்தது.

சுற்றிலும் அக்ரோஹிணிப் படைகளின் அணிவகுப்புகளும், பாரத தேசத்தின் அரசர்களின் பதாகைகளும் படபடத்துக் கொண்டிருந்த அந்த மகா மேளாவில், உலகியல் கணக்குகளும் க்ஷத்திரிய ராஜதந்திரங்களும் ஒரு நொடியில் உதிர்ந்து சாம்பலாயின.

ராதையின் கேள்விக்கு கண்ணன் ,“ராதே… நான் எப்போது இந்த கிருஷ்ணனாக மாறுவது என்று நீயே சொல்?”

பதில் அவனிடமிருந்து வெறும் சொல்லாக வரவில்லை; நனைந்த விழிகளிலிருந்தும் நடுங்கும் விரல்களிலிருந்தும் கசிந்தது. க்ஷத்திரிய வீரியமும் யோகேஸ்வரனின் விஸ்வரூபமும் சரிந்து, ஆணும் பெண்ணும் தங்களின் எல்லைகளை அழித்துக் கொண்டு ஏகத்துவமாய் உறைந்து நின்ற தருணம் அது.

குருக்ஷேத்ர போர் முடிவாகி விட்டது. கண்ணனுக்கு முடிவு தெரியும். அவனுள் வெகு நாட்கள் இருந்த ஏக்கம் காற்றில் பரவியது.

பிருந்தாவனத்திலிருந்து கோபிகைகள் வந்துவிட்டார்கள் என்ற செய்தி காற்று வழியே எட்டியிருந்தது. அவர்கள் காமமும் எழிலும் கொண்ட இளம் கன்னியரல்ல; கிருஷ்ண விரகத்தில் உருகி, எழுபதும் எண்பதுமாய் நரை விழுந்து, உடல் வளைந்து தள்ளாடி வந்த தவ வடிவங்கள். தலைகளில் மூன்று அடுக்கு நெய்ப் பானைகள்—ஒன்று கண்ணனுக்கு ஊட்ட, இன்னொன்று அவன் திருமேனியில் பூச, மூன்றாவது அவன் திருமேனி பட்டு வழியும் பிரசாதத்தை மீண்டும் அள்ளித் தங்கள் நெஞ்சில் புதைத்துக்கொள்ள. வழியில் சமாதி நிலைக்குச் சென்று வழி மறந்துவிட்டால், திரும்பும் போது இந்த நெய் வாசத்தைப் பற்றிக்கொண்டே மீண்டும் பிருந்தாவனத்தை அடைந்துவிடலாம் என்று அவர்கள் வரைந்து வந்த வழி அது.

அரசர்கள் நடுவே வீற்றிருந்த கிருஷ்ணனின் நாசியில், அரை குரோச தூரத்திலேயே அந்த நெய்யின் வாசம் வந்து மோதியது. துவாரகாதிபதியின் கம்பீரத் திரைகள் கிழிந்தன. எங்கே அவர்களைக் கண்ட மாத்திரத்தில் தன் நிதானம் குலைந்து விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில், அந்தப்புரத்திற்குள் ஓடி உத்தரீயத்தால் முகத்தை மூடிக்கொண்டு தரையில் சாய்ந்து கதறி அழுதான்.

அங்கே வாசலில், கருடக் கொடியை மட்டுமே குறியாகப் பார்த்துக்கொண்டு, விழிகள் மேலே சொருக, இருவர் கைகளைப் பற்றித் தள்ளாடி வந்து நின்றாள் ராதை. திரௌபதி ஓடிவந்து அவளை வரவேற்றாள். ருக்மிணியும் சத்யபாமாவும் திகைத்து நின்றனர். அஷ்ட மகிஷிகளும் நடுவில் ராதையை நிற்க வைத்து, அவளுக்குப் பாத நமஸ்காரம் செய்து மண்டலமாய் நின்று கைகூப்பினார்கள்.

உள்ளே ஓடிவந்த ருக்மிணி, கண்ணனின் தோளைத் தொட்டாள். அவன் உடல் அக்னி போல் கொதித்து நனைந்திருந்தது.

உதடுகள் துடிக்கக் கண்ணன் ,“ருக்மிணி… ராதை… ராதை வந்திருக்கிறாளா? அவள் நிலை என்ன?”

“சுவாமி… அவளைப் பார்த்தால் நீங்கள் நிற்பது போலிருக்கிறது; உங்களைப் பார்த்தால் அவள் கிடப்பது போலிருக்கிறது. நடுவில் நின்றது ராதையா அல்லது நீங்களா என்று எங்களால் அடையாளம் காண முடியவில்லை!”

கண்ணன் எழுந்து வெளியே வந்தான். அவன் உருவம் துவாரகாதிபதியிலிருந்து மீண்டும் வேணுகோபாலனாய் மாறியிருந்தது.

அந்தப் பெருவெளியில், கங்கையின் மைந்தனான பீஷ்மர் தூரத்திலிருந்து ஓடிவந்தார். தர்ம சாஸ்திரங்களின் பாரத்தைச் சுமந்து, பிரம்மச்சரிய விரதத்தின் உச்சத்தில் நின்ற கிழட்டு பீஷ்மர், அரச உடைகளையும் கவசங்களையும் களைந்து, இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, கைகளில் புஷ்பங்களை ஏந்தியபடி புழுதி பறக்க ஓடோடி வந்தார். ராதையின் பாதங்களின் முன் நெடுஞ்சாண் கிளையாய் விழுந்து கதறினார், “வேதங்களின் முடிவில் தேடிய பிரம்மம் இதோ ஒரு கோபிகையின் கால் புழுதியில் சரணடைந்து நிற்கிறதே! யுத்த தர்மங்களும், ராஜநீதிகளும், அத்தனை தபசுகளும் இந்தப் பிரேமத்தின் ஒரு துளிக்கு ஈடாகுமா? என் வாழ்நாளின் அத்தனை புண்ணியங்களும்,பாபங்களும் இந்தத் தரிசனத்தில் கரைந்துவிட்டன!” என்று பிதற்றினார்.

ஒரு ஓரத்தில் நின்ற உத்தவன், கண்களில் நீர் வழிய இந்த சங்கமத்தை நோக்கினான். அவன் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

ஒரு காலத்தில் தான் பிருந்தாவனத்திற்குச் சென்றபோது, ‘கிருஷ்ணன் சர்வ வியாபி, அவனுக்கு உருவமில்லை, அவன் தத்துவம்’ என்று ஞான உபதேசம் செய்ய முயன்றதும், கோபிகைகளோ ‘எங்கள் நெஞ்சில் கண்ணன் இல்லாத இடமேது, இல்லாத இடத்திற்குத்தானே அவன் வர வேண்டும்?’ என்று கேட்டுத் தன் ஞான அகந்தையை உடைத்தெறிந்ததும் நினைவுக்கு வந்தது.

உத்தவன் மனதுக்குள் உரைத்துக்கொண்டான்

“ஞானம் என்பது பகவானை அறியும் முயற்சி; ஆனால் பிரேமையோ பகவானையே தன் வசமாக்கும் மாயை. பந்தமும் முக்தியும் கடந்து நிற்கும் இந்த மாயைக்கு முன்னால், நான் கற்ற வேதாந்தங்கள் வெறும் தூசு!”

கிருஷ்ணன் ஒவ்வொரு கோபிகையின் முன்னும் நின்றான். ஒருவனுடைய கைகளைப் பற்றி கண்ணீருடன் , “நீ அன்று எனக்குக் கொண்டு வந்த வெண்ணெயின் சுவை இன்னும் என் நாவில் அகலவில்லையே…” என்றான்; இன்னொருவளை நோக்கி, “என் நெற்றியில் திலகமிட்டு அனுப்பிய உன் கைரேகை என் புருவத்தில் அப்படியே பதிந்திருக்கிறதே…” என்று விம்மி அழுதான். ஒவ்வொரு கோபிகையையும் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, அவர்களின் பாதங்களைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டான்.

அப்போது மடியில் முடிந்து வைத்திருந்த ஒரு சிறு துணி மூட்டையைப் பிரித்தாள் ஒரு கோபிகை. அதற்குள் பிருந்தாவனத்தின் புழுதி மண் இருந்தது.

“கண்ணா… நீ ஓடி ஆடித் திரிந்த யமுனைக் கரையின் மண்… உன் பாதங்கள் பதிந்த பிருந்தாவனத்தின் துகள் இது!”

கிருஷ்ணன் நடுங்கும் கைகளால் அந்தப் புழுதியை அள்ளினான். எந்த வாய்க்குள் யசோதை அகில உலகங்களையும் கண்டாளோ, அதே வாயில் அந்தப் பிருந்தாவனத்து மண்ணை அள்ளி ஒரு பிடி விழுங்கினான்.

“இந்த மண்ணை விடவா வைகுந்தம் பெரிது? இந்தத் தூசியில் தானே என் ஜீவன் புதைந்து கிடக்கிறது!” என்று தேம்பினான்.

அருகில் நின்ற ராதை, தன் முந்தானையால் கண்ணனின் நனைந்த முகத்தைத் துடைத்தாள். “கண்ணா உன் மயிலிறகை ஒளித்து வைத்துப் பாதுகாப்போமே… அப்படி நீ தலையில் சூடிய மயில் பீலியை ஒரு பானைக்குள் இத்தனை காலமாய் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் கண்ணா, இப்போது அதை நீ சூட்டிக் கொள்கிறாயா?” என்று ஒரு பானையிலிருந்து மயில் பீலியை எடுத்துக் கொடுத்தாள்.

“ராச மண்டலத்தில் ஜெயதி தேதிகம் பாடி உன்னைத் தேடினோமே… அப்போது நாங்கள் தொடுத்து உன் கழுத்தில் சாற்றிய வனமாலை உலர்ந்து விட்டது. ஆனால் உன் வாசம் அகலாது என்று தினமும் இதை முகர்ந்து பார்ப்போம். இன்று எங்கள் அனைவருக்கும் இந்த மாலையை உன் திருக்கரங்களால் சூட்டிவிடு கண்ணா!”

காய்ந்த அந்த மாலைகளை அவன் அவர்களுக்கு சாத்தினான். தன் உடல் முழுவதும் அவர்கள் கொண்டுவந்த நெய்யைப் பூசிக்கொண்டு, தடுமாறி நின்றான்.

அக்கணத்தில், அந்தப் புழுதி படிந்த வெட்ட வெளியில் காலம் சட்டென உறைந்து நின்றது. கோபிகைகள் கண்ணனைச் சுற்றி வட்டமாய் நின்றார்கள். நடுவில் நின்ற கிருஷ்ணனின் திருக்கரங்கள் ராதையின் கரங்களைப் பற்றின. அடுத்த வினாடி, அங்கு ஒரு தெய்வீக ராசலீலை மீண்டெழுந்தது.

கண்ணன், ஒவ்வொரு கோபிகையின் அருகிலும் தானே நின்றாடினான். உடல்களற்ற, தூய ஆன்மாக்களின் ஆதி நடனம் அது. லோகாயதக் கண்களுக்கு அது நடனமாய் விரிந்தது; ஆனால் அதன் மெய்த்தத்துவமோ, ‘ஜீவாத்மாக்கள் ஒவ்வொன்றும் பரமாத்மாவைத் தனக்குள்ளேயே அடைந்துவிட்ட பரிபூரண ஆனந்த நிலை.’ அங்கே காமமில்லை; பேதமில்லை; பிரிவின் துயரமனைத்தும் பரவசப் பிரேமையாய் உருமாறியிருந்தது.

அந்த நடனத்தைக் கண்ட ருக்மிணி, சத்யபாமா, அஷ்ட மகிஷிகள், திரௌபதி, பீஷ்மர், உத்தவன் அனைவரும் மூச்சடக்கி நின்றனர். அங்கே அவர்கள் கண்டது மனித உணர்வுகளின் சங்கமத்தை அல்ல; பிரபஞ்ச இயக்கத்தின் மூல உண்மையை!

கிருஷ்ணனின் இதயத்தில் ராதையும், கோபிகைகளின் தாகத்தில் கிருஷ்ணனும் இரண்டறக் கலந்து நின்ற அந்த மகோன்னத பிரேமையின் உச்சத்தில், இறை தத்துவம் முழுவதுமாய் அவர்களுக்குள் திறந்துகொண்டது.

நடனம் ஓய்ந்ததும், திரௌபதியும் மற்ற மகிஷிகளும் கண்ணனைச் சூழ்ந்து அமர்ந்தார்கள்.

“கண்ணா, என்ன ஆயிற்று ? உன் நாடி எப்படி இருக்கிறதோ என்று அச்சமாய் இருக்கிறது. உன்னை நாங்கள் எவ்வாறு காக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுங்களேன்,” என்று திரௌபதி கேட்க, கண்ணன் தன் நிலையில் இல்லை.

கண்ணன் ஏக்கத்தோடு உரைத்தான். “இங்கு தங்க தட்டுகளில் ஏதேதோ கனிகள் இருக்கின்றன ராதே… ஆனால் ஒன்றும் என் நாவில் இறங்கவில்லை. ஸ்ரீதாமனும் சுபலனும் என் தோளில் கைபோட்டு, பாதி தின்ற கனியை எனக்கு ஊட்டுவார்களே… நாம் கோவர்த்தன கிரிச்சாரலில் அடித்துப் பிடுங்கித் தின்போமே, அப்படி இங்கு இல்லை. யமுனையின் பெருக்கில் நண்பர்களோடு நீராடி விட்டு, ஈர வஸ்திரத்தைப் பிழிந்து குடித்த அந்த யமுனா தீர்த்தத்தின் ருசி இந்த அரண்மனை அமிர்தத்தில் இல்லையே ராதே… எனக்கு மிகக் கடினமாக இருக்கிறது!”

ராதை செய்வது அறியாது தவித்தாள் .

பாஞ்சாலி அவனை அணைத்துக் கொண்டாள், “ராதே, கலங்காதே… இவனை என் உயிராக நான் காப்பேன், என் சோதரனை என் கண்களெனத் தாங்குவேன்.”

கண்ணன் உள்ளே ஓடிப் போய் பண்டக சாலையைத் துழாவினான்.

கோபிகைகளின் பயணத்திற்கு உணவாகுமா என்று எளிய ரொட்டிகளைத் தேடினான். வாழைத்தார் நார்ச் சணலை அப்படியே தோளில் இழுத்துப் போட்டுக் கொண்டு, கைகளில் கிடைத்த கனிகளை அள்ளி வந்து கோபிகைகளின் மடியில் கொட்டினான். “பெற்றுக் கொள்ளுங்கள்… உண்ணாமல் புறப்படக் கூடாது!” என்று பதறினான்.

காலத்தை கடந்தவனுக்கு, கோபிகைகள் காலத்தை ஞாபகம் மூட்டினர் .

பிரிவின் தருணம் வந்தது.

“என்னை விட்டுச் செல்லாதீர்கள்… வாயில் வரை வந்து விட்டால் ஊரின் எல்லை வரை வர வேண்டும் என்பது தர்மம். எல்லை வரை வந்துவிட்டால் உங்களோடு பிருந்தாவனத்திற்கே வந்து விடத் தோன்றும்… இந்த அரச உடைகளைக் களைந்து எறிந்துவிட்டு, ஒற்றை வேட்டியைக் கட்டிக்கொண்டு உங்கள் பின்னாலேயே ஓடிவந்து விடுவேனோ என்று எனக்கு அச்சமாய் இருக்கிறது!” என்றான் கண்ணன்.

“கலங்காதே கண்ணா… இமை மூடித் திறக்கும் ஒரு க்ஷண நேரம் தானே? நாங்கள் மனதைத் திடப்படுத்திக் கொள்கிறோம்,” என்று சொல்லி, திரும்பிப் பார்க்கக் கூடாது என்று ரதங்களிலும் வண்டிகளிலும் ஏறிப் புழுதியைக் கிளப்பி அவர்கள் மறையத் தொடங்கினார்கள்.

கிருஷ்ணனால் நிற்க முடியவில்லை. மாளிகையின் உப்பரிகைக்குத் தலைதெறிக்க ஓடினான். தூரத்தில் புழுதிப் படலமாய் மறையும் அவர்களைப் பார்த்து, “ராதே… என்னை விட்டுப் போகாதே… இந்தக் கண்களை மூடிவிட்டால் அகிலமே இருண்டுவிடும் ராதே!” என்று அனாதையாய் அலறினான்.

தூரத்தில் அந்தப் பசு ராதையை முட்டி உப்பரிகையைக் காட்டியது. ராதையும் பசுவும் திரும்பி ஒருமுறை அவனை நோக்கின. கிருஷ்ணன் அங்கேயே நிலைகுலைந்து சரியப் போனான்.

அப்போது ஒரு கரம் அவன் தோளைத் தாங்கியது. வசுதேவர் நின்றிருந்தார்.

“கண்ணா… உன்னை இத்தனை காலமும் என் ரத்தமாய், க்ஷத்திரிய குமாரனாய் மட்டுமே பார்த்து மகா பிழை செய்துவிட்டேன். உன்னை நான் முழுமையாய்ப் புரிந்துகொள்ளவில்லை. என் மீதிருக்கும் இந்தப் புத்திர பாசத்தின் மாயையை அறுத்துவிட்டு, அந்த கோபிகைகளிடம் இருக்கும் அந்த எல்லையற்ற பிரேமையில் ஒரு துளியை எனக்கு வரமாய்ப் பிச்சையிடு கண்ணா!” என்று தன் மகனின் பாதங்களைப் பற்றிக் கதறினார்.

அனைவரும் விடைபெற்றுச் சென்ற அந்திம மாலையில், பாசறையின் பெருவெளியில், கைகளையும் கால்களையும் தளரவிட்டு, வானத்தை நோக்கி வெறுமையாய்க் கிடந்தான் யோகேஸ்வரன். திரௌபதியும் மற்ற மகிஷிகளும் அவனைத் தூக்கி மடியில் கிடத்தினர்.

அவனது சரீரமும் பாரதப் போரின் வியூகங்களும் அங்கே குருக்ஷேத்திரத்தின் விளிம்பில் கிடந்தன; ஆனால் அவனது ஆன்மாவோ, உருகி வழிந்த அந்த நெய்யின் வாசத்தைப் பற்றிக்கொண்டு, கோபிகைகளின் சக்கரத் தடங்களோடு பிருந்தாவனத்தின் புழுதிக்குள் என்றென்றைக்குமாய் ஓடி மறைந்து விட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன