
கஸ்தூரிக்கு மேலெல்லாம் வலித்தது. இந்த வலியோடு பாரம் சுமக்கணும் என்ற நினைப்பே கசப்பாக இருந்தது.
வலியைப் பார்த்தால் குழந்தையின் வயிற்றை நிரப்பமுடியாது என்று நினைத்தவள், வலியைப் பொறுத்துக் கொண்டு, பொம்மைக் கூடையைத் தலைக்கேற்றினாள்.
“பொம்மை வாங்கலியோ பொம்மை” கூவிக்கொண்டே வந்தாள்.
தலையில் சும்மாடு, அதன் மேல் லாவகமாக வைக்கப்பட்ட பொம்மைகள் அடங்கிய கூடை, இடுப்பில் குழந்தை.
பாரம் தாங்காமல் கால்கள் கடுக்க, தன்னை நொந்தவாறு நடந்தாள்.
குழந்தையின் அன்பான அரவணைப்பில், அவ்வப்போது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
பூட்டிக் கிடந்த ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்த பசங்க, திடீரென்று அடித்துப் பிடித்து ஓடினர்.
இதைச் சற்றும் எதிர்பாராத கஸ்தூரியின் காலை ஒருவன் இடர, அவள் சும்மாடு சரிய, திடீரென்று சமாளித்துத் தானும் விழாமல், கூடையை இறுகப் பிடித்து, குழந்தையையும் இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
” பசங்களா! இந்நேரம் நான் விழுந்திருந்தா எனக்கும், குழந்தைக்கும் அடிபட்டு பொம்மையெல்லாம் உடைஞ்சிருக்கும். எனக்குப் பெருத்த நஷ்டமாயிருக்கும். பொறுப்பில்லாத ஆம்பளையால நான் பாரம் சுமந்து திரியறேன். படிச்ச பசங்க நீங்க!
கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோங்க. “
அந்தப் பத்துல, ஒருத்தனாவது புரிந்து திருந்துவான் என்ற நம்பிக்கையில் பொரிந்து தள்ளினாள்.
126
