
சிவப்பு நிற க்ரேட்டா கார் அந்த பிரம்மாண்ட அரங்கத்தின் வாசலில் வந்து நின்றது. முக்கா பேண்ட், சிவப்பு மெகா ஸ்லீவ் டீ ஷர்ட் அணிந்திருந்த நவ்யா கீழே இறங்கினாள். கத்தரிக்கப்பட்ட முடியைத் தூக்கிச் செருகி ஒரு க்ளிப் போட்டிருந்தாள்.
‘க்ளக்,க்ளக்’ என அவளது ஹீல்ஸ் சத்தம் எழுப்ப, வேகமாக மேக்கப் அறைக்குள் நுழைந்தாள். மடமடவென அலங்காரம் நடந்தது.
“கலை புதிது” குழுவின் ஆண்டு விழா நிகழ்வில் மாறுவேடப் போட்டி.
“நவ்யா, டக் டக்குன்னு குதிரை மாதிரி நடக்காத. எங்க அந்த கூடை?”என்றாள் நிரஞ்சனா. அவள் தான் இயக்குநர், ஒப்பனையாளர், அமைப்பாளர் எல்லாம்.
“இதோ கூடை . பொம்மைகளை எடுத்து வை. ஷைலுக்குட்டி எங்க?”
திரை உயர்ந்தது. மஞ்சள் காட்டன் சேலை, சிவப்பு சட்டை, இடுப்பில் குழந்தை, தலையில் பொம்மைக் கூடை சகிதம் நவ்யா நயம்படவே வந்தாள்.
மனதுக்குள் “பொம்மை வாங்கலையோ, பொம்மை” என்ற அந்த ஒற்றை வாக்கியத்தைச் சொல்லிச் சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தவள், மேடையில் இருந்த ஒலிவாங்கியை நெருங்கினாள்.
“எனக்கு மூச்சா வருது” என ஷைலு கீரிச்சிட்டுத் துள்ளி எகிறினாள்.
இடுப்பில் விழுந்த உதையால் நிலை குலைந்த நவ்யா சரிந்தாள். பொம்மைகள் சிதறின.
கலங்கிய கண்களுடன், குரல் தழுதழுக்க… ”பொம்ம…பொம்ம…வாங்கலையோ” என விசும்பினாள் நவ்யா.
”பொம்மை விற்ற அபலைக்கு முதல் பரிசு. தத்ரூபமாக இருந்தது”, என்றனர் நடுவர்கள்.
142
