தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/சங்கு

     சரஸ்வதி பூஜை நெருங்குதேன்னு  பொம்மை வாங்க மயிலை மாடவீதியில் நடக்க ஆரம்பித்தேன். சிவப்பு வெளுப்பு சங்கு வளையல்கள் அணிந்த வங்க அழகி ஒருத்தி  கடவுளர்களை விற்றுக் கொண்டிருந்தாள். பக்கத்துக் கடைகளில் விற்பதைக் காட்டிலும் தரையில் விற்கும் அவளிடம் ஒவ்வொரு பொம்மையும் முப்பது நாற்பது  ரூபாய் விலை குறைவே. 

    மெதுவா போய் எனக்குத் தெரிந்த கால் குறை  ( அரைகுறையை விடக் குறைவு) பங்களாவில் பேசத் தொடங்கினேன். ” எங்க தூத்துக்குடியிலிருந்துதான்  உங்க ஊருக்குச்  சங்கு ஏற்றுமதியாகிறது” ன்னு சொன்னதும்  என்மேல் அபரிமிதமான மரியாதை. பொம்மைகளை மற்றவர்களுக்கு விற்பதைக் காட்டிலும்  இருபது ரூபாய் குறைத்துக் கொடுத்தாள்.   ” உனக்குக் கிடைக்கிற லாபத்தை என்னிடம் பங்கு போடாதே ” என   உரிய விலையைக் கொடுத்தேன். 

     அடுத்த நாள் கோவிலிலிருந்து வருகையில்  அவள் தனது குழந்தையுடன்  கடை விரிக்கப் போய்க் கொண்டிருந்தாள். கைக்குழந்தை பசியில் அழ ஆரம்பித்தது. கையிலிருந்த  கோவில்  பிரசாதத்தைக் குழந்தைக்குக் கொடுக்கச் சொன்னேன். 

” வேண்டாம் சார். அதக்கு பசி பழகிப் போச்சு. பசிதான் எங்களுக்கு மன உறுதி கொடுக்குது.” எனக் கை குவித்தாள்.  சிவப்பு, வெண் சங்கு வளையல்கள் கண் முன்னே எழுந்தன. சங்கு குளிக்கும் வீரர்களின் மனத்திண்மை அவளிடமிருந்து. நினைக்கையிலேயே சிலிர்ப்பு.

(134 வார்த்தைகள்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன