
கிட்டத்தட்ட பத்து வருடமாகக் கொலு பொம்மை விற்கிறாள். “இந்த ராமரு செட் வாங்கி வை. அயோத்தியே ஓன் வீட்டுக்கு வந்துட்ட கணக்காயிடும்”
“இந்தோ இந்த துர்கை,லெட்சுமி, பார்வதி செட் வாங்கு. எம்புட்டு சொகமா இருப்பன்னீட்டு”
“அன்ன பூரணிய பாரு. அம்புட்டு பேருக்கும் படியளக்கறா”
ஒவ்வொரு பொம்மைக்கு ஒவ்வொரு கதை சொல்லுவாள்.
“எடும்மா, பாத்துப் போட்டுத் தறேன் என்று விலையை ஏற்றி, பின் இறக்கி நம்மை ஆட்கொண்டு விடுவாள்.
“மம்மா.. கொஞ்சம் வாங்கமா” மல்லி குரல் கொடுத்தாள்.
“பொம்மை நறையா இருக்குமா. எறக்காத வேண்டாம்” என்றாள் மங்களம் உள்ளிருந்து.
“ஒரு நிமிசம் வந்து ஒரு கைப் பிடிமா” உரிமையாகச் சொன்னாள் மல்லிகா.
“நீ தானே அத்தைகிட்ட கொரவன், கொரத்திக் கேட்டியாமே?”
“வள்ளியம்மை வரலியா?”
“எங்ஙன வர்ரது? அதுதான் காய்ச்சல் வந்து போய்ச் சேந்துட்டாங்களே”
அதிர்ந்தாள் மங்களம்.
“கடைசி நிமிசம் வரைக்கும் மேல மூணாவது தெருவுல பச்சைகேட் வீட்டம்மாவுக்கு கொரவன், கொரத்திக் குடுக்கணும்னு சொல்லிக் கிட்டே இருந்துச்சு. அதான் எடுத்தாந்தேன்”.
குறவன் குறத்தி பொம்மைகளைக் கையில் வைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள் மங்களம். இந்த வருடம் கொலுவில் குறவன் குறத்தி செட்டை எல்லோரும் சிலாகித்துப் பேசினார்கள்
123
