நாபா.மீரா/காளி சொரூபம்

“அம்மா, வீட்டுல ஒரே போர் அடிக்குது. இன்னைக்கு நானும் உங்க கூட பொம்மை விற்க வர்றேன்.”
சிறுமியின் ஆசையைக் கலைக்க மனமில்லாமல், “வா சியாமா, ஆனா ரொம்ப தூரம் நடக்கணுமே, முடியுமா உன்னால்,” என்று கேட்டபடியே கூடையைத் தூக்கிக் கொண்டாள் புவித்ரா.
வாளிப்பும், வனப்பும் நிறைந்த இளவயதுப் பெண்.குடிகாரக் கணவன் , தாயையும் ,மகளையும் நிர்க்கதியாக்கிவிட்டு ஓடிப்போனவன்தான்.
“இந்த தெரு வேண்டாம் சியாமா. நாம் இன்னும் ரெண்டு தெரு தள்ளிப் போய் விக்கலாம்மா.”
“ஏமமா, இந்தத் தெருவில் யாராச்சும் வாங்குவாங்கதானே!”
விடுவிடுவென்று நகர்ந்த மகளை வேறு வழியில்லாமல் பின்தொடர்ந்தாள் புவித்ரா.
“ஏய் நம்ம ஆளு வர்றாடா, வாங்கக் கவனிப்போம்.”
சியாமா வாடி போயிடலாம், அவங்க சரியான காலிப்பசங்க.
“நீ ஏம்மா பயப்படறே. எங்கிட்ட இதோ சூலம் இருக்கு பாரு. பிரச்சினை பண்ணாங்கன்னா குத்தி குடலை உருவிடலாம்‌.”
அருகில் வம்பு செய்ய வந்த ரௌடிகளை, “என்னடா, ஆத்தா வந்திருக்கேன் தெரியலியா, பொம்பளைங்ககிட்ட வாலாட்டினா குடலை உருவிடுவேன் ஜாக்கிரதை!”
அவள் கையில் இருந்த சூலமும், தலைவிரித்து ஆடிய கோலமும், ஆத்தா மகமாயி இவ மேல ஏறிட்டா என்று காலில் விழுந்து எழுந்து கைகூப்பியபடி ஓடிவிட்டனர்.
இன்னமும் நடுக்கம் சற்றும் குறையாமல் நின்றிருந்த தாயை நோக்கிக் கண்ணைச் சிமிட்டினாள் சியாமா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன