
மண்டையைப் பிளக்கும் உச்சி வெயில்!
சரளா தலையில் சுமக்கும் கூடையிலிருந்த பொம்மைகளின் மண்டைகளும் சுடுகின்றன. ஆனால் இது கோபத்தினால் வந்த சூடு.
சரளாவிற்குக் காலையிலிருந்து ஒரு பொம்மையும் விற்கவில்லை. இடுப்பில் அமர்ந்திருந்த பிரியாவின் கையில் பொம்மை சூலம், வயிற்றிலோ தீயாய்ப் பசி.
“பிரியா, அது என்னுடைய சூலம், கொடுத்துடம்மா” தடித்த குரல் கொஞ்சலாகக் கேட்டது. கூடையிலிருந்து பார்வதியுடன் நிற்கும் சிவனின் கண்களில் கெஞ்சும் பார்வை.
“ம் ஹூம், குடுக்க மாட்டேன். எனக்கு வயித்தப் பசிக்குது”
“ஏய் பிரியா, அது என்னோட சூலம். குடுக்கப் போறயா இல்லையா?” மிரட்டியது எட்டுவித ஆயுதங்களுடன் எட்டு கைகளையும் விரித்து நிற்கும் காளி.
“முடியாது. காலைலேர்ந்து நானும் அம்மாவும் ஒண்ணும் சாப்பிடல. பசிக்குது. குடுக்க மாட்டேன்”
கையில் கெட்டியாக சூலத்தைப் பிடித்துக்கொண்டு, பிரியா யாருடன் பேசுகிறாள்? சரளாவுக்குப் புரியவில்லை. பசியினாலோ, வெயிலினாலோ இருக்கலாம் என்றெண்ணியவாறு, புடவைத் தலைப்பால் குழந்தையின் தலையைப் போர்த்தினாள்.
“சரி, சூலத்தைத் தர்றேன். ஆனா, யாரு மொதல்ல கூடையிலிருந்து விலைக்கு வெளியே போகிறீர்களோ, அவங்களுக்குத்தான் தருவேன்” கறாராகச் சொன்னாள் பிரியா. ஆயுதத்தின் மகிமையறிந்த குழந்தை போலும்!
‘சட்’டென்று ஒரு குலுக்கல். சரளா சுதாரிக்குமுன் கூடையிலிருந்த அத்தனை பொம்மைகளும் மறைந்துவிட்டன. பிரியாவின் கையிலிருந்த சூலத்தையும் காணவில்லை!
சரளாவினால் நம்பவே முடியவில்லை. அவள் இடுப்பிலிருந்த சுருக்குப் பை நிறையப் பணம்!
140 words

பேஷ் டாக்டர். மிக நன்று!👏
அருமை..சபாஷ்.
அருமை..சபாஷ்.