வேடிக்கை மனிதரைப் போல்/ப.மதியழகன்

நன்றியை மறந்தவர்களை
நாயென்பதா பேயென்பதா
இரக்கப்பட்டால் ஈயவேண்டியிருக்குமோ
எனக் கணக்குப் பார்ப்பவர்கள்
அவர்கள்
சோற்றுக் கையால்
காக்கைகளை விரட்டாதவர்கள்
நன்கொடை வேண்டி
வருபவர்கள் மீது
நாயை அவிழ்த்துவிடுபவர்கள்
சதுரங்க ஆட்டத்தில்
சகுனி இவர்கள்
பணம் வருமென்றால்
பிணத்துடன் குடித்தனம் நடத்துபவர்கள்
பொய்யை பத்துதடவை
திரும்பத் திரும்பக் கூறி
அதனை உண்மையாக்கிவிடுவார்கள்
ஊரை அடித்து உலையில்
போட்டவர்களுக்கே மேடையில்
மாலை மரியாதையெல்லாம்
கிடைக்கும்
கொல்லையில் பணம் காய்க்கும்
மரம் இருந்தால் கூட
திருப்தியடைய மாட்டார்கள்
பேராசையால் பொன் முட்டையிடும்
வாத்தின் கழுத்தை திருகி
பார்த்தவர்கள்தான் இவர்கள்
தொட்டதெல்லாம் பொன்னாகும்
வரம் கிடைத்தாலும் அவன்
ஆசை அடங்காது
இமயமலை பொன்னால்
ஆனதென்றால் எவ்வளவு
நன்றாக இருந்திருக்கும் என
நினைப்பார்கள்
மெத்தையின் அடியில்
பணக்கட்டுக்களை அடுக்கி
அதன்மேல் படுத்துக் கொள்வார்கள்
உறக்கத்தின் போதுகூட
அவர்கள் மனம்
தங்க ஆபரணங்களை
வைத்துப் பூட்டியிருக்கும்
அலமாரியையே வலம் வரும்
அவசரமாக கிளம்பும்போது கூட
வீட்டின் பூட்டை
நூறுமுறையாவது இழுத்துப்
பார்ப்பார்கள்
தன்னிடம் பழகுபவர்களையெல்லாம்
சந்தேகக்கண் கொண்டே
பார்ப்பார்கள்
அவனுக்கு நல்லது கெட்டது தெரியாது
பணம் கண்ணை மறைத்துவிடும்
ஒன்றை இரண்டாக்குவதும்
இரண்டினை மூன்றாக்குவதும்
அவனுக்கு கைவந்த கலை
கூரையைப் பிய்த்துக் கொண்டு
கொட்டும் பணத்தினை அள்ள
இரு கைகள் போதாது அவனுக்கு
சேர்த்து வைத்த சொத்து
மூன்று தலைமுறைக்கு
வருமென்றாலும் அவனால்
மூன்று வேளைக்கு மேல்
விருந்து உண்ண முடியுமா?
விலை கொடுத்து வசதி வாய்ப்புகளை
வாங்கிவிட முடியும்
உறவுகளை வாங்க முடியாது என
அவனுக்குத் தெரியாது
பணம் பத்தும் செய்யும்
இறந்தவனை உயிர்த்தெழச் செய்யுமா?
பணமிருந்தால் தட்டாமலேயே
கதவுகள் திறக்கும்
காத்திருக்காமலேயே கேட்டதெல்லாம்
கிடைக்கும்
தங்கத்தால் மாளிகை கட்டலாம்
உள்ளே வராதே என
காலனை எட்டி உதைக்க முடியுமா?
கோடி கொட்டிக் கொடுத்தாலும்
நிம்மதி கிடைக்குமா?
செல்வம் ஆற்றுவெள்ளம் போல
வரும்போகும் என அவன்
புரிந்து கொள்ள மாட்டான்
விட்டிலைப் போல
நெருப்பினில் வீழ்ந்துவிடத்தான்
துடிப்பான்!