கம்பனைக் காண்போம்—13/வளவ. துரையன்

                                  

                           கடலுடன் போர்

ஒரு படை போரிடக் கிளம்பிச் சென்றால் அப்படையை உடைய மன்னனின் கொடிபோகும். அவனுடைய யானைப்படை செல்லும். கடலும் அதேபோலப் படையெடுத்துக் கொண்டு கடலரசனுடன் போரிடச்செல்வது போலச் சென்றதாம்.

    பணை முக்களி யானை பல் மாக்களோடு
    அணி வகுத்தென ஈர்ந்து எடுத்து ஆர்த்துவெண்
    மணி நுரைக்கொடி தோன்ற வந்து ஊன்றலால்
    புணரிமேல் பொரப் போவதும் போன்றதே             [23]

[பணை=பருத்த; களி=மகிழ்ச்சி; மாக்கள்=விலங்குகள்; புணரி=கடல்; பொர=போரிட]

வெள்ளமானது பருத்த முகத்தையும், மகிழ்ச்சியையும் உடைய யானைகளையும் இன்னபிற விலங்குகளையும் அணிவகுத்து வரும் படை போல் இழுத்துக்கொண்டு, நீரில் தோன்றும் வெண்மையான நுரையானது கொடிபோல் தோன்றும்படி கடலரசனுடன் போரிடச் செல்வதுபோல் வந்தது.