டி.வி.ராதாகிருஷ்ணன்/குழந்தையும்..தெய்வமும்

“ஏம்மா..இவ்வளவு பொம்மைகளையும் விற்றால்,உனக்கு எவ்வளவு கிடைக்கும்?” என்றார் அவர்.

“மொத்தமும் வித்துப் போச்சுன்னா..இதை விற்க கொடுத்த முதலாளி எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பார்”

அதற்குள் அவள் இடுப்பில் இருந்த குழந்தை..”அம்மா..இன்னைக்காவது எனக்கு விளையாட நான் கேட்ட பொம்மை வாங்கித்த தர்றீயா?” என மழலையில் கேட்டது.

“.உனக்கு பிடிச்ச பொம்மையை உங்க அம்மா இன்னிக்கு கண்டிப்பா வாங்கித் தருவாங்க?” என்றார் அவர்.

“கண்டிப்பா இன்னிக்கு வாங்கித் தரேன்” அவள் குரல் தழுதழுத்தது.[

“இதோ பாரும்மா..நீ இந்த கூடை நிறைய பொம்மைகளை வைச்சுண்டு, வீதி வீதியா, “பொம்மை..பொம்மை”ன்னு விக்க வேண்டாம்..இந்த பொம்மைக்குள்ல நான் கொஞ்சம் பவுடர் வைச்சுத் தரேன்.அதை நான் சொல்ற இடத்திலே இந்த பொம்மைகளோட கொடுத்துடு.நான் உனக்கு ஐயாயிரம் தரேன்..அதை வாங்கிட்டு நீ குழந்தைக்கு அது கேட்கற பொம்மை வாங்கிக் கொடுத்துட்டு சந்தோஷமா வீட்டுக்குப் போ”

“சாமி..அது தப்பான காரியமா?”

“தப்புன்னு எதுவும் இல்லை.அப்படியே இருந்தாலும், அதை செய்யறது நான் தானே, இதோ பாரு யாரும் உன்னை எதுவும் கேட்க மாட்டாங்க. நான் சொல்றத கேட்டா சுளையா ஐயாயிரம் இப்பவே தரேன்.”

“அம்மா,இன்னிக்கு எனக்கு கண்டிப்பா அந்த பொம்மை வேணும்”

சற்று யோசித்தவள், “சரி சாமி”..என்று கூடையை இறக்கி வைத்து விட்டு..ஒவ்வொரு பொம்மையின் அடிப்பாகத்தில் இருந்த ஓட்டையில் அவர் கொடுத்த வெண்ணிற பவுடர் பொட்டலத்தை திணித்தாள்.

அவர் ,அவள் கையில் ஒரு அட்ரஸைக் கொடுத்து விட்டு,ஐயாயிரம் ரூபாயையும் கொடுத்தார்.

அவள் மீண்டும் அந்த பொம்மைக் கூடையையும், குழந்தையையும் சுமந்தபடியே புறப்பட்டாள்.

அவர் கொடுத்த விலாசத்தை நெருங்கிய போது..அங்கு ஒரே போளீஸ் கூட்டம்.

ஒரு காவலர் “எங்கே போற?” என்றார்.

“இந்த பொம்மைகளை இந்த வீட்ல எடுத்துட்டு போக வந்தேன்”

” எங்கே கூடையை இறக்கு”

அவள் பயந்தபடியே கூடையை இறக்க, அவர் பொம்மைகளை பரிசோதிக்க ஆரம்பித்தார். .

“போலீஸ் அங்கிள்..பொம்மைகளுக்குள்ளே பவுடர் இருக்கு.அதை நீங்க பார்க்கலியே” என்றது குழந்தை.

காவலர் உடனே..பொம்மைகளின் அடிப்பாகத்தைப் பார்த்தனர்.

அவளை உடனே காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பொம்மையில் பவுடர் இருந்ததை ஏண்டி சொன்னே” என்றாள் ரகசியமாக அம்மா குழந்தையிடம்.

“நீதானேம்மா..அரிச்சந்திரன் கதையைச் சொல்லி, பொய்யே சொல்ல்க கூடாதுன்னு சொன்னே.நானும் அதைத்தானே செய்தேன்.
அம்மா..நான் கேட்ட அரிச்சந்திரன் பொம்மையை வாங்கித் தரமாட்டியா?” என்றது.குழந்தை.


  • .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன