
இள மீனாள் சும்மாட்டின் மேல் பொம்மை கூடையை தூக்கி வைத்தாள். சுப்பையா, ” ஞாபகம் இருக்கில்லம்மா? பொம்மைகளுக்கு நான் சொன்ன விலைக்கு மேல் உன் சாமர்த்தியம் போல் வித்துக்க. அதுல நான் இடை பட மாட்டேன். ஒரு பொம்மைக்கு நான் இருபது ரூபா கமிஷன் கொடுத்துடறேன். உனக்கு ரெண்டு பக்கமும் வரும்படி. வரும். எனக்கு எல்லா பொம்மையும் விக்கணும்; அம்புட்டு தான். பொம்மைகளோடு மட்டும் திரும்பாதே!
மீதமான பொம்மையை நான் திரும்பி வாங்க மாட்டேன்; புரிஞ்சுதா? என்றார்.
“சரி! அண்ணாச்சி! நான் எல்லாத்தையும் வித்துப் போட்டுதான் வருவேன்; நீ வேணா பாரு” என்றாள். கூடையிலிருந்த காளியின் சூலத்தை மட்டும் குழந்தை மணிமேகலை கையில் எடுத்துக் கொண்டு அழகாக சுற்றினது, ஒரு நல்ல நடன அசைவு போல் இருந்தது. மூன்று வயது மணிமேகலையை இடுப்பில் வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
அவள் அந்த பெரிய அடுக்கு மாடி கட்டடத்தின் வளாகத்தின் முன் அமர்ந்து, மகிஷாசுரமர்த்தினியின் ஸ்லோகத்தை; “அயிகிரி நந்தினி.. என்று ஆரம்பித்து தன் இனிய குரலில் பாட ஆரம்பித்தாள். சிறு குழந்தையின் நடனத்தைக் காண சிறு கூட்டம் கூடியது. அதிலும் எல்லா பாடல்களின் முடிவிலும் வரும் முத்தாய்ப்பான
” ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே” என்ற வரிகளுக்கு மணிமேகலை பிடித்த அடைவு எல்லோருடைய பாராட்டையும் பெற்றது.
கூட்டத்தில் இருந்தவர்கள் , மணிமேகலைக்கு மன மகிழ்வுடன், பணம் கொடுக்க வந்தவர்களை, கையெடுத்து கும்பிட்ட இள மீனாள், ” ஐயா! என் சிறுகுழந்தையின் நடனத்தை ரசித்த தற்கு நன்றி. அவள் நடனத்திற்கு பணம் வேண்டாம். என் பொம்மைகளுக்கு நீங்களே, ஒரு விலை போட்டு வாங்கிக் கொள்ள வேண்டுகிறேன். எனக்கும் என் பிழைப்புக்கான பொம்மை வியாபாரம் நடந்தால் போலிருக்கும்.” என்றதும் இள மீனாள் எதிர்பார்த்த விலைக்கும் மேலான, ஒரு தொகையைக் கொடுத்து , ஒவ்வொருவரும் ஓரிரண்டு பொம்மைகளை ஆவலுடன் எடுத்து செல்ல பொம்மைக்கூடை காலியாக, இள மீனாள் மன நிறைவுடன் மணிமேகலையை இடுப்பில் வைத்துக் கொண்டு சுப்பையா அண்ணாச்சியைப் பார்க்க விரைந்தாள்.
