
“பிடி.. பிடி.. பிடிங்க அவனுகளை!”
இடுப்பில் குழந்தையுடன் பொம்மைகள் கூடையைச் சுமந்துகொண்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த கமலிக்குப் பின்னால் சத்தம் கேட்டது.
அவளை இடித்துத் தள்ளிக்கொண்டு இரண்டு பேர் வேகமாக ஓடினார்கள். பின்னால் அவர்களைத் துரத்திக்கொண்டு இரண்டு காவலர்கள் ஓடினார்கள். தெருவே பரபரப்பானது.
“யாரோ நம்ம சிவன் கோயில்லே எதையோ திருடிட்டு ஓடுறாங்களாம்”
வீட்டை அடைந்த கமலி, குழந்தையை இறக்கிவிட்டு, கூடையைத் தலையிலிருந்து இறக்கினாள்.
“அய்ய்.. இது என்னம்மா?” என்றபடி கூடையிலிருந்து ஒரு ஐம்பொன் சூலத்தை எடுத்தாள் குழந்தை.
கூடையைப் பார்த்த கமலிக்குத் திக்கென்றது.
அதில் மற்ற பொம்மைகளுடன் துணியில் சுற்றப்பட்ட ஏதோ கிடந்தது.
அதைப் பிரித்தபோது உள்ளே சிவன் பார்வதியின் ஐம்பொன் சிலை! சிவன் கோயிலின் உற்சவர் சிலை!
கோயிலில் திருடியவர்கள் இவளை இடித்துவிட்டு ஓடும்போது அவள் கூடையில் இதைப் போட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள்!
கூடையை மீண்டும் தலையில் வைத்தாள். குழந்தையைச் சூலத்துடன் இடுப்பில் தூக்கிக்கொண்டு காவல் நிலையத்தை அடைந்தாள்.
“ஐயா! அப்போ நீங்க துரத்துன திருடங்க பெறகு வந்து எடுத்துக்கலாம்னு இதை என் கூடையில போட்டுட்டுப் போயிருக்காங்க. இந்தாங்க சிவன் சொத்து. கோயில்ல சேர்த்துடுங்க”
உற்சவர் சிலைகளையும் சூலத்தையும் ஒப்படைத்தாள்.
(வார்த்தைகள் எண்ணிக்கை 123)
