வானவில் கே. ரவி/சிறுவனவன் பாடுகின்றான்

(ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு முன்னர், 1966-67-ஆக இருக்கலாம், நடந்த நிகழ்ச்சி: சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் இருந்து நானும் என் வகுப்புத் தோழன் கிரிஜா சங்கரும் நடந்தே வீடு செல்லும் வழியில், பஜார் தெருவில் ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டு “மேரே தோஸ்தி மேரா பியார்” என்ற மொஹமத் ரஃபியின் பாடலைத் தேன்போன்ற குரலில் கண்பார்வையற்ற ஒரு சிறுவன் பாடிக் கொண்டிருந்தான். நின்று விட்டோம்.
பாடல் முடிந்ததும், கமர்கட், கடலை மிட்டாய் வாங்க எனக்குத் தரப்பட்ட காசை அந்தச் சிறுவனுக்கு அருகில் இருந்த கிண்ணத்தில் போட்டு விட்டு எதுவும் பேசாமல் கனத்த மனத்துடன் நடந்து சென்றோம்.
அப்பொழுது உதித்து, எழுதப்படாமலேயே நெஞ்சில் உறைந்திருந்த சில வரிகள், நேற்று மாலை திடீரென்று நினைவுக்கு வர, அவற்றை நிறைவு செய்து, இதோ பகிர்கிறேன்)
————-————————-————-

தெருவோரம் அமர்ந்திருக்கும் சிறுவனவன் பாடுகிறான்
திருவோடு பக்கத்தில் வாய்பிளந்து கிடக்கிறது
வருவோரும் போவோரும் நிற்காமல் நகர்ந்துவிட
ஒருபூனை மட்டுமங்கே கண்மூடி ரசிக்கிறது

தாய்தந்தை இல்லானோ தாளத்தில் வல்லானோ
தனியாக வாழ்கின்ற சோகத்தைச் சொல்லானோ!
நோயென்று நில்லானோ நோன்பினிலே உள்ளானோ
பாட்டினிலே கரைகின்ற பரவித்தை கற்றானோ

துயரத்தைப் பாடுகிறான் துள்ளலையும் பாடுகிறான்
உயரத்தில் பறக்கின்ற உணர்ச்சியையும் தூண்டுகிறான்
கடவுளையும் பாடுகிறான் காதலையும் பாடுகிறான்
காசுக்குப் பாடவில்லை கணக்கின்றிப் பாடுகிறான்

காசுவிழும் சத்தத்தைக் காதாலே கேட்டுத்தான்
பகலுணவுக் காகுமா என்றவனும் பார்த்திருப்பான்
பார்வையற்ற பாலகனின் பாடலுக்குப் பரிசுதர
யார்வருவார் எதுதருவார் எதுவுமேநிச் சயமில்லை

காசு கிடைத்தால் கடைக்குப்போய் வாங்கிவந்த
கஞ்சியானா லும்கொஞ்சம் பூனைக்கும் ஊற்றிடுவான்
காசெதுவும் விழாவிட்டால் சிறுவனவன் என்செய்வான்!
காதடைக்கும் பசியோடு கண்ணுறங்கி விடுவானோ!

மெட்டுக் குலையாமல் மேல்ஸ்தாயி சஞ்சரித்து
மீண்ட பிறகு திருவோட்டில் கைவிட்டு
மெல்லத்து ழாவுகிறான் சல்லிக் காசுமில்லை
ரொட்டித் துண்டொன்றைக் கவ்விக் கொண்டுவந்து
திருவோட்டில் போட்டது திருட்டுப் பூனை
கடையெழு வள்ளல்களும் கைதட்டி மகிழவே!


02-09-2026

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன