
ஐந்து வயது சிறுவன் நிகில் மும்முரமாக எதையோ செய்து கொண்டிருந்தான். அவன் அம்மாவிற்கு ஆச்சரியம். எப்போதும் பேட்டும் பாலும் எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி விடுவான். ஒரு இடத்தில் உட்கார மாட்டான். பள்ளிக்கூடத்திலும் அவனைப் பற்றி புகார். அட்டேன்ஷன் ஸ்பான் ரொம்ப கம்மி என்று தினமும் புகாரைக் கேட்டு நொந்து போவாள் அவள்.
இன்று அதிசயமாக ஒரு இடத்தில் தொடர்ந்து பத்து நிமிடமாகக் குனிந்து எதையோ செய்கிறான் . மனதில் ஒரு நம்பிக்கை.
மெதுவாக அவன் அருகில் சென்று ” கண்ணா, பட்டு செல்லம், என்ன பண்ற? “
அவனிடமிருந்து பதில் இல்லை. ஒரு புத்தகத்தை வைத்து மூடிக் கொண்டான்.
அப்போதுதான் கவனித்தாள் அவள். அவன் எதையோ வரைந்து கொண்டிருந்தான். இதுவரை அவன் வரைவதில் ஆர்வம் காட்டியதே இல்லை. திடீரென்று எப்படி இந்த மாற்றம்?
மனதிற்குள் மகிழ்ச்சி. ” நிகில் கண்ணா, எனக்குச் சொல்லிக் கொடுப்பா, எனக்கு வரையவே தெரியாது. ஆனா, வரையனும்னு ஆசை மட்டும் இருக்கு. பிளீஸ், காட்டு செல்லம்” கெஞ்சினாள் நிகில் அம்மா சுகன்யா.
நிகில் சட்டென்று அம்மாவை நிமிர்ந்து பார்த்தான்.அவன் முகத்தில் ஒரு ஒளி. தான் வரைந்ததை அம்மாவிடம் காண்பித்தான். ஏதோ மனித முகமும், மிருக முகமும் கலந்து விதம் விதமாக கலர் கலவையில் ஒரு புரியாத படமாக அவளுக்குத் தோன்றியது. ஆனாலும், அதை வெளிக்காட்டாமல், ” சூப்பர் நிகில், ரொம்ப பிரமாதம், அம்மாக்கு ஒரு கோடு கூட சரியா போடத் தெரியாது. எனக்குப் பெருமையா இருக்கு நிகில்” என்று சொல்லி அவனை அன்புடன் அணைத்துக் கொண்டாள்.
“அம்மா, நேத்து புதுசா ஒரு ஆர்ட் டீச்சர் வந்தார்மா. நான் ஏதோ கலர் கலராக கிறுக்கினேன். அவர் கிட்ட வந்து ” சூப்பரா இருக்கு கண்ணான்னு சொல்லி எல்லாரையும் கை தட்டச் சொன்னார் மா, அப்புறம் நான் வரஞ்சத தூக்கிக் காமிச்சு எனக்கு ஒரு சாக்லெட் கொடுத்தார் மா” அவன் கண்ணில் மகிழ்ச்சி.
எப்போதும் புகாரையே கேட்ட குழந்தைக்கு ஒரு பாராட்டு, அங்கீகாரம். இதன் மூலம் அவன் திறமை வெளி வந்துள்ளது.
சுகன்யா அந்த ஆசிரியருக்கு மனதிற்குள் நன்றி சொன்னாள். இனிமேல் நிகிலைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சுகன்யா அடுத்த நாள் பள்ளிக்குச் சென்று எல்லா ஆசிரியர்களையும் பார்த்து நன்றி சொல்ல வேண்டும் எனத் தீர்மானித்து, நிழலுக்குப் பிடித்த கேசரி பண்ண ஆரம்பித்தாள்.
247
