நாகேந்திர பாரதி/’ நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ‘ சிறுகதை’

கவுரி சங்கர் அவர்களின் ‘ நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ‘ சிறுகதை .
பல வீடுகளில் ‘நடப்பதெல்லாம் அவர் நினைத்து விட்டதால்’ வந்த சிறுகதை . ஆம் சொந்தங்களுக்குள் நிலவும் பணத் திமிர் போட்டி பொறாமை நாம் பார்த்தது , பட்டது தானே. அதை இந்தக் கதையில் படிக்கும் போது நாம் உடனே கதையோடு ஒன்றி விடுகிறோம். அவ்வாறு ஒன்ற வைத்தது ஆசிரியரின் எழுத்துத் திறமை.

அக்கா, தம்பி , – தம்பியின் மகன் அக்காவின் மகளை விட மூத்தவன் . முறைப்பையன்.தம்பி நியாயமான முறையில் சம்பாதிப்பவன், அக்காவின் கணவர் கையூட்டு வாங்கி கை நிறைய சம்பாதிப்பவர். வசதிகளில் இருக்கும் வேறுபாடு அக்காவை பணத் திமிர் கர்வக்காரி ஆக்கி தம்பியையும் தம்பி மகனையும் வார்த்தைகளாலும் செயல்களாலும் அவமானப்படுத்த , தம்பி குடும்பம் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிச் செல்கிறது . காலம் ஓடுகிறது. தம்பி மகன் அயல்நாட்டுக் கம்பெனியில் நல்ல சம்பளத்தோடு . அவன் விரும்பும் அயல்நாட்டுப் பெண்ணை மணமுடிக்க ஏற்பாடு நடக்கிறது. கல்யாணப் பத்திரிகையை அக்காவுக்கும் கொடுத்து வரச் சொல்கிறார் தம்பி, தனது மகனிடம்.

தயக்கத்துடன் செல்லும் அவனுக்கு அத்தையின் பிரமாண்ட பங்களா வாசலில் குறைக்கும் நாயும், முறைக்கும் பாதுகாப்பு ஊழியரும், நிலைமையை ஓரளவு காண்பிக்க, உள்ளே செல்லும் அவனுக்கும் அத்தையின் பாரா முகமும் பகட்டுப் பேச்சும், அவள் மாறவில்லை என்பதை காட்டினாலும் பொறுமையோடு தன் கல்யாண விபரங்களைத் தெரிவிக்கிறான். ஒவ்வொரு பேச்சுக்கும் அத்தையின் குதர்க்கமான பதிலும், கோபக்கார ஏச்சும் இவன் பொறுமையைச் சோதித்தாலும் , அப்பாவின் குணத்தோடு அமைதியாக இருக்கிறான்.

இறுதியில் அவன் சொல்லும் சம்பள விபரங்கள். அயல்நாட்டு சம்பளம் , இந்திய மதிப்பில் வருடம் ஒரு கோடி என்றதும் , அத்தையின் பேச்சு மாறுகிறது. தன் மகளை மணமுடிக்கச் சொல்லி அவன் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட , மறுக்கும் மருமகனை மறுபடியும் அவமதித்து அனுப்புகிறார். திரும்புகிற அவன் நினைப்பில் அந்தக் காவல் நாயின் முறைப்பும் குறைப்பும். அத்தையை ஒத்திருப்பதாக எண்ணுவதோடு கதை முடிகிறது.

இந்தக் கதையின் சிறப்பு இதில் வரும் வசனங்கள் என்றே தோன்றுகிறது. அத்தையின் வசனங்களில் வெளிப்படும் பணத் திமிர், வெறுப்பும், கோபமும்,ஏளனமும், பொறாமையும், அந்தக் கதாபாத்திரத்தை நம் கண் முன்னே கொண்டு வருகின்றன.
உதாரணத்திற்கு ஒன்றிரெண்டு .
ஆரம்பத்தில் தம்பியையும் , தம்பி பையனையும் அவமதிக்கும் ஏளன வார்த்தைகள் இப்படி .
“என்னடா ரமேஷ், உனக்கு எவ்வளவு தடவை சொன்னாலும் புத்தி வரப்போறது கிடையாது. உங்க அப்பன் எப்படியோ குமாஸ்தாவா வேலையில் சேர்ந்து விட்டான். அதுவும் என்னுடைய அப்பா சிரமப்பட்டு அவனை படிக்க வைத்ததால் மட்டுமே. இல்லேன்னா, அவன் இப்ப பூக்கடையில் பூ வித்துக்கிட்டு இருப்பான். சரி, அவனை விட்டுத்தள்ளு. நீ அவனை விட மோசமால்ல இருக்கிறாய். நீ என்னத்த படிச்சி கிழிக்கப்போகிறாய். நீ பிளஸ் 2 வில் வாங்கின மார்க்கை விட, என்னுடைய பெண் மைதிலி நூற்றைம்பது மதிப்பெண்கள் அதிகம் வாங்கியிருக்கிறாள். அவள் கூட பேசுறதுக்கும், பழகுறதுக்கும் உனக்கு என்ன தகுதி இருக்குன்னு இந்த ஊட்டுக்குள்ள வந்து போய்கிட்டு இருக்கிறாய்? உன்னைப்போன்ற முட்டாளோடு சேர்ந்து என்னுடைய பெண்ணும் கெட்டுப்போய் விடுவாளோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. நீ இந்த வீட்டிற்கு இனிமேல் வரவேண்டாம்.”
.
இறுதியில் தனது திருமண பத்திரிகை கொடுக்க வரும் தம்பி பையனின் சம்பளம் தெரிவதற்கு முன்பு பேசும் பேச்சு இப்படி
“அது சரி, அந்த பெண்ணும் நீயும் ஏற்கனவே திருமணம் ஆகி குடித்தனம் நடத்திக்கொண்டு இருக்கிறீர்களா ? அல்லது தற்போதைய கலாச்சாரப்படி திருமணம் செய்யாமல் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்களா ? கேட்பதற்கே சிரமமாகத்தான் இருக்கிறது. தற்போது ஒழுக்கம் மிகவும் குறைந்து விட்டது. அதுவும் நம்முடைய குடும்பத்தில் இப்படி ஒழுக்கம் குறைந்தவர்கள் இருக்கிறார்கள் என்று தெரியும்போது இதயமே வெடித்துவிடும் போன்று இருக்கிறது.”

“ வேண்டும் என்றால் நீ பார்த்துக்கொண்டு இரு. உன்னை திருமணம் செய்து முடித்த பின்னர், ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குள் வேறு ஒருவனுடன் குடித்தனம் செய்ய போய் விடுவாள். இப்போது கூட அவள் வேறு எவனையும் காதலனாக வைத்து இருக்கிறாளா என்று தெரியவில்லை.

அவனுக்கு வருடம் ஒரு கோடி சம்பளம் என்று தெரிந்தபின் பேசும் பேச்சு இப்படி .
“உன்னுடைய திருமணம் பற்றி பேச வந்திருக்கிறாய். மைதிலிக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று ஒரு வார்த்தை கேட்டாயா?”

“வேறு பையன்கள் எதற்கு? நீ தான் இருக்கிறாயே? மைதிலியை நீ திருமணம் செய்து கொள்ளலாமே?”

திருமணம் முடிந்து விட்டதா? இல்லைதானே. அப்படியே திருமணம் நிச்சயம் ஆகியிருந்தாலும், வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று எந்த சட்டம் சொல்லுகிறது?”

“நான் உன்னுடைய அத்தை. உன்னுடைய நல்லதுக்கு தான் சொல்கிறேன். வெளிநாட்டுப் பெண்களை நம்பாதே. இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வா. மேற்கொண்டு நாம் பார்த்துக்கொள்ளலாம்.”

ரமேஷின் பொறுமை எல்லை மீறியது. இருக்கையை விட்டு எழுந்தான்.
“அத்தை எப்படியாவது திருமணத்திற்கு வந்து எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள். “
அத்தையின் மௌனம் சொல்லாமல் சொல்லியது- “நீ கிளம்பலாம்.”
சூட்கேஸை கையில் எடுத்துக்கொண்டவன் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். டீப்பாயின் மீது தாம்பாளம் அப்படியே இருந்தது. பத்திரிகையும் பிரிக்கப்படாமல் இருந்தது.


தனது காத்திரமான வசன நடை மூலம் ,இப்படி ஒரு பணத் திமிர் கர்வம் பிடித்த அகங்கார அத்தையைக் கண் முன் கொண்டு வந்து காட்டி விட்டார் கவுரி சங்கர் அவர்கள். படிப்பவர்க்கு அவர்கள் பழகிய பல முகங்கள் ஞாபகம் வரலாம். இந்தத் தீய குணங்களின் கொடூரத்தை வெளிப்படுத்திய விதத்தில், இவர்களை அடையாளம் காட்டும் ஒரு சமூகப் பணியை இந்தச் சிறுகதை செய்திருக்கிறது. அதற்கு கவுரி சங்கர் அவர்கட்கு நன்றிகள்.
வாய்ப்புக்கு நன்றி . வணக்கம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன