சசிகலா விஸ்வநாதன்/கிருஷ்ணரே! தவழ்ந்து வாருங்கள்!

(1)

சிகைக்காய் அரைத்து நான் வைத்தேன்.
சவ்வாது, புனுகும், கற்பூரமும் கலந்த
அண்டா வென்னீரும், ஆறியே போகாமல்,
கிருஷ்ணரே! தவழ்ந்து வாருங்கள்!

(2)

பொன் கிண்ணத்தில் செங்களபம் குழைத்தே
நான் வைத்திருக்கேன் கண்ணே! கற்பகமே
நீர் வாரும்!இன்பமாய் நீராட
கிருஷ்ணரே! தவழ்ந்து வாருங்கள்!

(3)

மகரக்குழை, குண்டலங்கள், தோள் வளை, புல்லாக்கு,
தங்க அரைஞாண், கயிறு இருக்கு.

பொன் சிலம்பும்,
கிங்கிணியும்,
முக்காப்பும் உண்டு .

கிருஷ்ணரே! தவழ்ந்து வாருங்கள்!

(4)
கஸ்தூரி திலகமிட்டு,
மணிமாலை
அணிவித்து,

அரவிந்த கண்களில் அஞ்சன மையிட்டு,

கன்னத்தில்
காப்பு பொட்டிட, காத்திருக்கேன்.

கிருஷ்ணரே! தவழ்ந்து வாருங்கள்!

(5)
சரிகை கரையிட்ட செம்பட்டு உடுத்தி,

சாய கொண்டையும்,
தாழம்பு பின்னலுமிட்டு;

முத்துச்சரம் சூட்டி
மயில்பீலியும் சூட

கிருஷ்ணரே! தவழ்ந்து வாருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன