
(1)
ஒருகாம்பில் ஒருபூவே பூக்கும் ஒற்றை
மரம் ஒருபோதும் தோப்பு ஆகாது
கற்றைப் பணம் கடைவழிக்கு வராது
இருப்பது ஒரே வாழ்க்கை.
(2)
இருப்பதைக் கொண்டு இறையை வேண்டு
இதுவே நிலைத்து நிம்மதி தாவென்று
இருப்பதை விட்டுப் பறப்பது வேண்டாம்
இருப்பது ஒரே வாழ்க்கை.
(3)
சாதியைக் கொண்டு சரித்திரம் படைக்க
வேதனையே மிஞ்சும் வெறுப்பும் மண்டும்
புழுக்கை நாயும் புறமே தள்ளும்
இருப்பது ஒரே வாழ்க்கை.
(4)
ஆணவப் பேச்சு அறவே ஒழி
ஆயிரம் எழுதி ஆயிரம் பரிசும்
அற்பமாய்ப் போகும் ஆயுள் முடிவில்
இருப்பது ஒரே வாழ்க்கை.
(5)
நன்றாய்ப் பிள்ளைகள் வளர்த்து நன்றாய்
வென்றிடப் படிக்க வைத்து ஒன்றாய்
உறவுகள் பண்புகள் பேணி வாழ்ந்திடு
இருப்பது ஒரே வாழ்க்கை.
(6)
காரில் போவது வசதி ஆப்பிள்
கைப்பேசி அதைவிட வசதி வெள்ளம்
போல் பெருகி அழியும் யாவும்
இருப்பது ஒரே வாழ்க்கை.
(7)
உழைப்பும் நேர்மையும் உத்தமம் பிழையில்லா
செயல்கள் சேர்த்திடும் புண்ணியம் பிள்ளைகள்
வாழ்ந்திட வழிகாட்டும் மந்திரம் உணர்க
இருப்பது ஒரே வாழ்க்கை.
(8)
வேலியில்லாப் பயிர்கள் பாழே பண்பு
வேலியில்லா யாவும் பதரே உணர்ந்து
நாள்தோறும் நன்மை கொண்டு நின்றிடு
இருப்பது ஒரே வாழ்க்கை.
(9)
ரொட்டித் துண்டுக்கு வாலாட்டும் நாய்
வெட்டிப் பேச்சு வீழ்த்தும் ஆபத்தில்
மட்டில்லாப் பேரன்புப் பேதமின்றிக் காட்டு
இருப்பது ஒரே வாழ்க்கை
(10)
கடவுள் உள்ளத்தில் உண்டு உணர்க
திறம்பட வாழ்ந்து செழுமை கொள்க
அறம் பிறழா எதிலும் செல்க
இருப்பது ஒரே வாழ்க்கை.
