வானவில் கே. ரவி/நகர்ந்து செல்லும் நத்தைக்கு

நகர்ந்து செல்லும் நத்தைக்கு
நான்கு நிமிடம் நாலாண்டுகளாம்
பறந்து செல்லும் பறவைக்கோ – ஒரு
காதம் கூட நூறடி தானாம்
அதனதன் வேகம் அதனதன் காலம்
காலச் செலவுக் கேற்ப அண்டக்
கோளம் விரியும் – எல்லைக்
கோடுகள் அழியும்

என் கணக்கின் படி ஆயுள் நூறு
முனிவர் சித்தர் கணக்கு வேறு
முப்பரிமாணக் கிணற்றுக் குள்ளே
முணுமுணுக்கும் தவளை நான்
வெட்ட வெளியாய் விரியென் றெவரோ
இட்ட கட்டளைக் கென்செய்வேன்
எங்கோ ஒருகுயில் கூவும் இசையில்
எனக்குள்ளேயும் வானம் விரிந்தது – நானே
எல்லாம் என்ற உண்மை புரிந்தது

05-09-2026

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன