பாலசாண்டில்யன்/கலக்கம் ஏன்?

கணவன் மறைந்த பிறகு கோமதியைச் சுற்றி உறவினர்கள் எனும் பூனைகள் வட்டமடித்தன; அவளது வீட்டைப் பறிக்கச் சதி செய்தன. ஆனால் அவள் ஒருநாளும் கலங்கவில்லை. “எலிகள் எந்தக் காலத்திலும் உணவு இன்றிச் செத்ததில்லை, பூனைகளுக்கு மத்தியிலும் அவை வாழக் கற்றுக் கொள்கின்றன” என்ற தத்துவமே அவளது அன்றாடக் கவசம்.
அவர்கள் மிரட்டியபோது கோமதி கத்தவோ, சண்டையிடவோ இல்லை. அமைதியாகத் தன் வீட்டின் முன்பகுதியை ஒரு மகளிர் சுயஉதவிக் குழுவின் தையல் மையத்திற்கு இலவசமாக வாடகைக்கு விட்டாள். பல பெண்களின் நடமாட்டமும், அதிகாரிகளின் வருகையும் அந்த வீட்டை எப்போதும் கலகலப்பாக வைத்திருக்க, உறவினர்களின் சூழ்ச்சிகள் அங்கே அடிபட்டுப் போயின.
திட்டம் பாழாகி அவர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறிய அந்த அந்தி மாலையில், முற்றத்தில் ஒரு பூனை எலியைத் துரத்திக் கொண்டிருந்தது. சாமர்த்தியமாக இடுக்கில் நுழைந்து தப்பிய அந்த எலி, வாயில் ஒரு தானிய மணியோடு எட்டிப் பார்த்தது.
கோமதி மெலிதாகப் புன்னகைத்தாள்.
எதிர்ப்புகளை விடத் தந்திரமாக வாழ்தலே வெல்லும் என்பதை அவள் வாழ்க்கை மீண்டும் நிரூபித்தது. எலியைத் துரத்தி விட்டு தனதருகில் களைப்புடன் வந்தமர்ந்த பூனையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தாள் கோமதி.

122

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன